இலங்கை செல்ல ரஜினிக்கு எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
இலங்கை செல்ல ரஜினிக்கு எதிர்ப்பு

2.0 படத்தை தயாரித்து வரும் 'லைகா' புரடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் ஒரு அங்கமான ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை.

லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகையின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது. இந்த வீடுகளை அங்குள்ள தமிழ் மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாதம் 9ஆம் தேதி இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார் ரஜினி.

2.0 படத்தில் நடித்து வரும் ரஜினியிடம், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவேண்டும் என்று லைகா நிறுவனத்தினர் கேட்டபோது, முதலில் மறுத்திருக்கிறார். ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி அது என்று சொல்லப்பட்டதை ஏற்று அதன் பிறகே அவர் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதுபோன்ற நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வடக்கு மாநில முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ் விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி மற்றும் ஜஸ்டிஸ் கமிட்டி மெம்பர் கீத் வாஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்!

இதற்கிடையில், ரஜினி இலங்கை செல்வதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவளவன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். “தமிழ்மக்களை வஞ்சிக்கும் சிங்களத்தின் கொடும்போக்கைக் கண்டித்து எல்லோரும் பேசவேண்டிய நேரத்தில், அதை திசைதிருப்பும் உத்தியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து ஒரு விழாவை நடத்தி அந்த ஒளி வெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று உலகத்துக்குக் காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. நடிகர் ரஜினிகாந்த், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டாம் என்று கூறி இருக்கிறார் திருமாவளவன்.

மூலக்கதை