விவசாயிகளின் அழுகுரல் மத்திய அரசுக்கு கேட்காதது ஏன்? - பிரகாஷ்ராஜ்

தினமலர்  தினமலர்
விவசாயிகளின் அழுகுரல் மத்திய அரசுக்கு கேட்காதது ஏன்?  பிரகாஷ்ராஜ்

தமிழகத்தில் விவசாயிகள் தொடர்ந்து 11வது நாளாக டில்லியில் உள்ள ஜந்தர் - மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வறட்சி நிவாரண நிதி, விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிச்சையேந்தும் போராட்டம், தூக்கு மாட்டிக்கொள்ளும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம், கோவணம் கட்டி போராட்டம்.... என போராடி வருகிறார்கள். ஆனால் இவர்களின் கோரிக்கைகள் தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில், விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலகினர் ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கைகளை என்னவென்று கேட்டறிந்தனர். போராட்ட களத்தில் விவசாயிகளின் நிலையை பார்த்து கண் கலங்கினார் பிரகாஷ்ராஜ்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ், மழை இல்லாததால் விவசாயம் நலிவடைந்து வருகிறது. விவசாயின் மகன் விவசாயியாக மாற வேண்டும் என்று எண்ணியது கிடையாது. 11 நாட்களாக போராடி வரும் விவசாயிகளின் அழுகுரல் மத்திய அரசுக்கு கேட்காதது ஏன். இந்தாண்டு கடன்களை ரத்து செய்துவிட்டால், அடுத்த ஆண்டு வறட்சி, வெள்ளம் ஏற்படும் போது பாதிக்கும் விவசாயிகளுக்கு என்ன செய்வது. எனவே இந்த விஷயத்தில் நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விஷால் பேசுகையில், 11 நாட்களாக போராடி வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் கவலைஅளிக்கிறது. அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க முன் வராதது வேதனை அளிப்பதாக உள்ளது. வாங்கிய கடனுக்காக சிலர் தாலியை கூட விற்றதாக சொன்னார்கள். ஒரு பத்து பேரின் கடன் என்றால் நடிகர் சங்கமே அடைத்து விடலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக கோடி கணக்கான கடன்களை அடைக்க வேண்டும் என்றால் அது மத்திய அரசால் மட்டுமே முடியும். இங்கே போராடுபவர்கள் அனைவரும் முதியவர்கள், அவர்களால் கஷ்டங்களை தாங்கிக்கொள்ள முடியாது, அதை பார்க்கவும் முடியவில்லை. இவ்வளவு நாளாக போராடியும் இவர்களின் கோரிக்கையை அரசு ஏற்காதது வேதனை அளிக்கிறது. இவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் முன்வர வேண்டும் என்றார்.

மூலக்கதை