லண்டன் தாக்குல் தொடர்பில் ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளான பெண்!

PARIS TAMIL  PARIS TAMIL
லண்டன் தாக்குல் தொடர்பில் ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளான பெண்!

 லண்டன் தாக்குதலின் பின், காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை வழங்குவதைக் கூட கவனிக்காமல் சென்ற முஸ்லிம் பெண் குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

 
லண்டன் பாராளுமன்றுக்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
 
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தனது காரை, தேம்ஸ் நதியின் மீதிருந்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் பாலத்தின் மீது பாதசாரிகள் மீது மோதியும் தாக்குதல் நடத்தியிருந்தார். 
 
தாக்குதல் சம்பவங்களை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம் பிடித்தார். அதில் ஒரு படத்தில், காயமடைந்து கிடக்கும் ஒருவருக்கு சக பாதசாரிகள் முதலுதவி செய்வதும், அவர்களை இலட்சியம் செய்யாமல் ஒரு முஸ்லிம் பெண் அலைபேசியைப் பார்த்தபடி கடந்து செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது.
 
சமூக வலைதளத்தில் இந்தப் படம் தரவேற்றப்பட்டதையடுத்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
 
எனினும், படத்தில் உள்ள முஸ்லிம் பெண் ஏதோ பிரச்சினை காரணமாகப் பதற்றத்துடன் நடந்து செல்வது தெளிவாகத் தெரிகிறது என்றும், அலைபேசியில் அவருக்கு அதிர்ச்சி தரக்கூடிய தகவல் எதுவும் கிடைத்திருக்கலாம் என்றும், தாக்குதல் நடந்த சம்பவத்தை விட்டு அவசரமாக வெளியேற அவர் முயற்சித்திருக்கலாம் என்றும் குறித்த புகைப்படக் கலைஞர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இது உள் நோக்கத்துடன் பிடிக்கப்பட்ட படம் அல்ல என்றும், இதனால் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட மன வருத்தத்துக்குத் தாம் மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இதனிடையே, குறித்த முஸ்லிம் பெண் பற்றிக் கருத்துக் கூற யாருக்கும் உரிமை இல்லை என்றும், முஸ்லிம் பெண்ணாக இருப்பதால்தான் அவர் மேல் இத்தனை கோபம்; இதுவே வேறு பெண்ணாக இருந்திருந்தால் அவரை அலட்சியம் செய்திருப்பார்கள் என்றும், படத்தில் அவர் ஏதோ தவிப்பில் அவசரமாக நடப்பது தெரிந்தும் இனவாதக் கருத்துக்களைப் பரப்பக்கூடாது என்றும் அவருக்கு ஆதரவாகக் கருத்துக்கள் பெருகி வருகின்றன.

மூலக்கதை