தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கடைசி டெஸ்ட் நாளை துவக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தொடரை வெல்லப்போவது யார்? இந்தியாஆஸ்திரேலியா இடையே கடைசி டெஸ்ட் நாளை துவக்கம்

தர்மசாலா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. புனேவில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இரு அணிகளும் தற்போது 1-1 என சமநிலை வகிக்கும் நிலையில், தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட், தர்மசாலாவில் உள்ள இமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை தொடங்குகிறது.


 13 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியின் 2016-17 ‘ஹோம் சீசன்’ கடந்தாண்டு செப்டம்பர் மாதம், நியூசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்டுடன் தொடங்கியது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நாளை தொடங்கவுள்ள தர்மசாலா போட்டிதான் 2016-17 ‘ஹோம் சீசனில்’ இந்திய அணியின் கடைசி டெஸ்ட்.

இந்த ‘ஹோம் சீசனில்’ நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களை கைப்பற்றிய இந்தியா, தர்மசாலா டெஸ்டில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் கைப்பற்ற முயலும். ரன் குவிக்க தடுமாறி வரும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ராஞ்சி டெஸ்டில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, தோள்பட்டையில் காயம் அடைந்தார்.

இதனால் தர்மசாலா டெஸ்டில் அவர் விளையாடுவது உறுதியாகவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரேயாஸ் அய்யருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என தெரிகிறது. இதனால் ஏற்கனவே அணியில் விளையாடி வரும் ஜோஸ் ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோருடன் 3வது வேகப்பந்து வீச்சாளராக ஜாக்சன் பேர்டை களமிறக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜாக்சன் பேர்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ கீப் அணியில் இருந்து நீக்கப்படுவார். புனே டெஸ்டில் ஸ்டீவ் ஓ கீப் 12 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தாலும், அதன்பின் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் தலா 3 விக்கெட்டுகள் என மொத்தம் 6 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தியுள்ளார்.

இதனால் பிட்ச் ஒத்துழைத்தால் மட்டுமே அவரால் பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்க முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. எனினும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் அணியில் இடத்தை தக்க வைத்து கொள்வார்.



இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த தொடரில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் ஆகும் என்றே வல்லுனர்கள் கணித்தனர். ஆனால் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி தற்போது வரை இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கடும் சவால் அளித்து வருகிறது.

தர்மசாலா டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணியும் கடுமையாக முயலும் என்பதால், விறுவிறுப்பான டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. நாளை காலை 9. 30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிதான், தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பர்-2 இடத்துக்கு சிக்கல்
தர்மசாலா டெஸ்டில் தோல்வியடைந்தால், தொடரை இழப்பதுடன், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2வது இடத்தை பறிகொடுக்கும் அபாயத்திலும் ஆஸ்திரேலியா உள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி நம்பர்-1 இடத்தில் உள்ளது.

தர்மசாலா போட்டியில் எந்த வகையான முடிவு கிடைத்தாலும், அது தரவரிசையில் இந்திய அணியை பாதிக்காது. ஆனால் 2ம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, அந்த இடத்தை தக்க வைத்து கொள்ள வேண்டுமானால், குறைந்தபட்சம் இந்த போட்டியை டிராவாவது செய்ய வேண்டும்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்து விட்டால், 2ம் இடத்தை தென் ஆப்ரிக்கா கைப்பற்றி விடும். தென் ஆப்ரிக்கா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியும் நாளை தொடங்குகிறது.

இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ கூட, இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா தோல்வி காண நேரிட்டால், 2ம் இடம் தென் ஆப்ரிக்காவுக்குதான்.


.

மூலக்கதை