சட்டசபையில் சபாநாயகருக்கு எதிரான தி.மு.க. தீர்மானம் தோல்வி

PARIS TAMIL  PARIS TAMIL
சட்டசபையில் சபாநாயகருக்கு எதிரான தி.மு.க. தீர்மானம் தோல்வி

தமிழக சட்டசபையின் நேற்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. காலை 11.09 மணிக்கு கேள்வி நேரம் முடிந்ததும், சபாநாயகர் ப.தனபால், “சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானம்” எடுத்துக்கொள்ளப்படுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர் கையெழுத்திட்டு, 21-2-2017-ம் நாளிட்ட கடிதத்தில், ‘சபாநாயகர் மீது நம்பிக்கையில்லை என்னும் தீர்மானத்தை கொண்டு வருகின்றோம்’ என்று கொடுத்திருந்தார்கள். 9-3-2017 அன்று, ‘சபாநாயகரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 68-ன் கீழ் கொண்டு வருகிறோம்’ எனக் குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். விதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு, அந்த கடிதம் அளிக்கப்பட்டு நேற்றோடு 14 நாட்கள் முடிந்த பின்னர், இன்றைக்கு அந்த அலுவல் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது” என்றார்.

பேரவை அனுமதி கிடைத்தது

தீர்மானம் குறித்து சபாநாயகர் ப.தனபால் பேசும்போது, “பேரவை விதி 70 (1)-ன்படி தீர்மானத்தை நான் பேரவைக்கு படிக்க வேண்டும். ‘ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இப்பேரவை தீர்மானிக்கிறது’ என்று தீர்மானம் உள்ளது. எனவே, இந்தத் தீர்மானத்தை முன்மொழிய பேரவை இசைவு அளிக்கிறதா, இல்லையா என்பதை அறிய, இத்தீர்மானத்தைக் கொண்டுவர இசைவளிக்கும் உறுப்பினர்களை அவரவர்கள் இடங்களில் எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

உடனே, தி.மு.க. உறுப்பினர்கள் 88 பேரும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 8 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் ஒருவரும் என மொத்தம் 97 பேர் எழுந்து நின்றனர். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால், “35-க்கும் குறையாத உறுப்பினர் எழுந்து நின்று இசைவு அளித்திருப்பதால், இத்தீர்மானத்திற்கு பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது என அறிவிக்கிறேன். சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானம் முன்மொழியப்பெற்று விவாதம் உடனே எடுத்துக்கொள்ளப்பட இருப்பதால், சபையின் அலுவல்களை மேற்கொள்ளுமாறு துணை சபாநாயகரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

அதனைத்தொடர்ந்து, காலை 11.18 மணிக்கு, சபாநாயகர் ப.தனபால் இருக்கையை விட்டு இறங்கி வெளியே சென்றார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சபாநாயகர் இருக்கையில் வந்து அமர்ந்து அவையை நடத்தத் தொடங்கினார். அப்போது, சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் அந்தத் தீர்மானத்தை வழிமொழிந்தார்.

அதன்பின்னர், காலை 11.19 மணிக்கு தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “தி.மு.க.வின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை பயன்படுத்திக்கொள்ள சபாநாயகர் தவறிவிட்டார். இந்த தீர்மானத்தை டிவிஷனுக்கு விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

விதி மீறல்களுக்கு உறுதுணை

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, “இந்த அவையில் யார் பெயரை சொல்லலாம், சொல்லக்கூடாது என்று விதி இல்லை. ஆனால், ஒருவரது பெயரை மட்டும் சொல்லக்கூடாது என்று சபாநாயகர் கூறுகிறார். தொடர்ந்து விதி மீறல்களுக்கு அவர் உறுதுணையாக இருந்தார். எனவே, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர், “சட்டசபை ஆரோக்கியமாக, பாரபட்சமின்றி நடக்க வேண்டும். எங்கள் கட்சிக்கு அலுவலக அறை ஒதுக்குவதைக்கூட சபாநாயகர் தடுத்தார். எனவே, இந்த தீர்மானத்தை நாங்களும் வழிமொழிகிறோம்” என்றார்.

வாக்கெடுப்பு

பின்னர், அவை முன்னவரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, “எல்லோரையும் அரவணைத்து செல்லும் பாங்கு சபாநாயகர் ப.தனபாலுக்கு உண்டு என்று ஜெயலலிதாவே பாராட்டியிருக்கிறார். இதைவிட நற்சான்றிதழ் யாரும் தரமுடியாது” என்று சபாநாயகர் ப.தனபாலுக்கு ஆதரவாக பேசினார்.

தொடர்ந்து, பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சி தலைவர் கொடுத்த தீர்மானத்தை முழுமையாக எதிர்க்கிறேன்” என்றார். இவ்வாறு, மதியம் 12.10 மணி வரை விவாதம் நடைபெற்றது. அதன்பிறகு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 3 முறை மணி ஒலிக்கப்பட்டது. அவைக் கதவுகளை மூட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உத்தரவிட்டார்.

குரல் வாக்கெடுப்பு

முதலில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ‘தீர்மானத்தை ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க’ என்று தெரிவிக்க துணை சபாநாயகர் கூறினார். அப்போது, ‘இல்லை’ என்ற குரல் ஓங்கிஒலித்தது. எனவே, தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதை தி.மு.க. ஏற்காததால், 2-வது முறையாக குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதும், தீர்மானம் தோல்வி அடைந்தது.

அதையும் மு.க.ஸ்டாலின் ஏற்காததால், பிரிவு வாரியாக எண்ணி கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 6 பிரிவிலும் உள்ள உறுப்பினர்களின் பெயரை, பிரிவு வாரியாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வாசித்தார்.

தீர்மானத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என்று 3 பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மதியம் 12.12 மணிக்கு தொடங்கிய வாக்கெடுப்பு 12.27 மணிக்கு முடிந்தது. அதனைத்தொடர்ந்து, ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை எத்தனை பேர்? என்று கணக்கு பார்க்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தீர்மானம் தோல்வி

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் மொத்தம் 97 பேர் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராக அ.தி.மு.க., மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகியவற்றின் உறுப்பினர்கள் 122 பேர் வாக்களித்தனர். நடுநிலையாக யாரும் வாக்களிக்கவில்லை.

எனவே, தி.மு.க. கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தார். அப்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி புறக்கணிப்பு

சட்டசபையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில், தி.மு.க. தலைவரும், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. இதேபோல், ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது அணியை சேர்ந்த 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எதிராக வாக்களித்த மயிலாப்பூர் தொகுதி உறுப்பினர் நட்ராஜ், நேற்றைய வாக்கெடுப்பில் சபாநாயகர் ப.தனபாலுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற நிலையில், மதியம் 12.33 மணிக்கு இருக்கையில் வந்து அமர்ந்த சபாநாயகர் ப.தனபால் தொடர்ந்து அவையை நடத்தினார்.

மூலக்கதை