அ.தி.மு.க. அணிகளுக்கு புதிய பெயர், சின்னங்கள் ஒதுக்கீடு

PARIS TAMIL  PARIS TAMIL
அ.தி.மு.க. அணிகளுக்கு புதிய பெயர், சின்னங்கள் ஒதுக்கீடு

அ.தி.மு.க.வின் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு தனித்தனி கட்சி பெயர்களையும், சின்னங்களையும் தேர்தல் கமி‌ஷன் ஒதுக்கி இருக்கிறது.
இரட்டை இலை முடக்கம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், சசிகலா அணியினரும் தேர்தல் கமி‌ஷனுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்காக தங்கள் தரப்பிலான ஆவணங்களையும் அவர்கள் தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதி மற்றும் தேர்தல் கமி‌ஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் மற்றும் மூத்த அதிகாரிகள் நேற்று முன்தினம் இரு தரப்பினரையும் நேரில் வரவழைத்து அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் கமி‌ஷன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கோ ஒதுக்குவது இல்லை என்றும், அந்த சின்னத்தை முடக்கி வைப்பது என்றும் முடிவு செய்தது.
கட்சி பெயரை பயன்படுத்த தடை

அத்துடன் அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரை இரு அணியினரும் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்ட தேர்தல் கமி‌ஷன், இரு அணியினரும் தாங்கள் எந்த பெயரால் அழைக்கப்படவேண்டும் என்பதை வியாழக்கிழமை (நேற்று) காலை 10 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், சுயேச்சை சின்னங்களில் இருந்து ஏதாவது மூன்றை குறிப்பிட்டு அதில் ஒரு சின்னத்தை அன்று காலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

மேலும் இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களை தேர்தல் கமி‌ஷனிடம் ஏப்ரல் 17–ந்தேதி கொடுத்து முறையிடலாம் என்றும் கூறியது.
ஓ.பன்னீர்செல்வம் அணி கோரிக்கை

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மனோஜ் பாண்டியன், கே.சி.பழனிச்சாமி, வக்கீல் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழு நேற்று காலை தேர்தல் கமி‌ஷனிடம் ஒரு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் தங்கள் அணிக்கு கீழ்க்கண்ட 3 பெயர்களில் ஏதாவது ஒரு பெயர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

1. அம்மா அ.இ.அ.தி.மு.க.

2. அ.இ.அ.தி.மு.க. (அம்மா)

3. அ.இ.அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா)

கீழ்க்கண்ட 5 சின்னங்கள் ஓ.பன்னீர்செல்வம் அணியினரால் முன்வைக்கப்பட்டன

1. இரட்டை விளக்கு மின்கம்பம்

2. கியாஸ் சிலிண்டர்

3. பானை

4. மோதிரம்

5. படகுடன் கூடிய படகோட்டி
சசிகலா அணி கோரிக்கை

இதேபோல் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், வக்கீல்கள் பரணிகுமார், ராகேஷ் சர்மா, பி.வி.செல்வகுமார், திவாகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சசிகலா தரப்பிலான கோரிக்கை மனுவை தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சசிகலா தரப்பில், கட்சி பெயராக கீழ்க்கண்ட மூன்று பெயர்கள் அளிக்கப்பட்டன.

1. அ.இ.அ.தி.மு.க.(அம்மா)

2. அ.இ.அ.தி.மு.க.(ஜெ)

3. அ.இ.அ.தி.மு.க.(ஜெ.ஜெ)

சசிகலா தரப்பில் கீழ்க்கண்ட மூன்று சின்னங்கள் முன்வைக்கப்பட்டன.

1. ஆட்டோ

2. கிரிக்கெட் மட்டை

3. தொப்பி
கட்சியின் பெயர், சின்னம் ஒதுக்கீடு

இரு அணியினரின் கோரிக்கைகளையும் பரிசீலித்த தேர்தல் கமி‌ஷன் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு அ.இ.அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரையும், இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தையும் ஒதுக்கி கடிதம் அளித்தது.

இதேபோல் சசிகலா அணிக்கு அ.இ.அ.தி.மு.க.(அம்மா) என்ற பெயரையும், தொப்பி சின்னத்தையும் இறுதியாக வழங்கியது.

சசிகலா தரப்பினருக்கு அவர்களுடைய வேண்டுகோளின்படி முதலில் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கி தேர்தல் கமி‌ஷன் கடிதம் அளித்தது. அந்த சின்னம் அவர்களுக்கு திருப்தி அளிக்காததால், அவர்கள் தங்களுக்கு ஆட்டோ சின்னத்துக்கு பதிலாக தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் கமி‌ஷனிடம் மறுபடியும் ஒரு கடிதம் அளித்தனர். அந்த கோரிக்கையை பரிசீலித்த தேர்தல் கமி‌ஷன் சசிகலா அணிக்கு பின்னர் தொப்பி சின்னத்தை ஒதுக்கி அதற்கான கடிதத்தை அவர்களிடம் வழங்கியது.
இடைத்தேர்தலுக்கு மட்டும்

தற்போது தேர்தல் கமி‌ஷன் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் அனுமதித்துள்ள கட்சியின் பெயர்களும், ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களும் வருகிற ஏப்ரல் 12–ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். ஏப்ரல் 17–ந் தேதியன்று தேர்தல் கமி‌ஷன் விசாரணையின் போது எடுக்கப்படும் முடிவுக்குப் பிறகே இரட்டை இலை எந்த அணிக்கு ஒதுக்கப்படும் என்பது தெரியவரும்.

இதுகுறித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
இடைக்கால ஏற்பாடு

தேர்தல் கமி‌ஷன் வெளியிட்ட உத்தரவில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. ஏனென்றால் அ.தி.மு.க.வில் எந்த பிளவும் கிடையாது. சட்டமன்றத்தில் கூட தற்போது எங்களுக்கு ஆதரவு உள்ளது. தேர்தல் கமி‌ஷன் பிறப்பித்த உத்தரவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால், நீதிமன்றம் செல்லும் நிலையில் இருந்தாலும், தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் நாங்கள் இருக்கிறோம்.

தற்போது எங்களுக்கு அளித்து உள்ள கட்சியின் பெயரும், தொப்பி சின்னமும் இடைக்கால ஏற்பாடுதான். இறுதியில் நாங்கள் வெல்வோம். உண்மையான அ.தி.மு.க. எங்கள் அணிதான். அ.தி.மு.க. தொண்டர்கள் எந்தவிதமான சந்தேகமோ, அச்சமோ கொள்ளவேண்டாம். டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. இது புரட்சித்தலைவரின் சின்னம். பல படங்களில் அவர் தொப்பி அணிந்து நடித்து இருக்கிறார். எங்கள் கட்சியை அம்மா கட்சி என்றுதான் சொல்வார்கள்.

இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
மனோஜ் பாண்டியன்

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனோஜ் பாண்டியன் கூறியதாவது:–

தேர்தல் கமி‌ஷனிடம் நாங்கள் கேட்ட சின்னங்களில் முதல் சின்னமான இரட்டை விளக்குடன் கூடிய மின்கம்பத்தை எங்களுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். அதேபோல் நாங்கள் கேட்ட கட்சியின் பெயரும் எங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் பெயரை தாங்கிய இந்த அணிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் கண்டிப்பாக எங்களுக்கு வெற்றியை தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு மனோஜ் பாண்டியன் கூறினார்.

மூலக்கதை