அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை; நிறுவனங்கள் தாராளமாக வழங்க அனுமதி

தினமலர்  தினமலர்
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை; நிறுவனங்கள் தாராளமாக வழங்க அனுமதி

புதுடில்லி : கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைக்கான வரம்பை ரத்து செய்யும், சட்டத்திருத்த நிதி மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

சட்ட திருத்தம்:


தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்கள், கடந்த மூன்று நிதியாண்டுகளில் ஈட்டிய, சராசரி நிகர லாபத்தில், 7.5 சதவீதம் வரை, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்த வரம்பு, புதிய சட்டத்திருத்த மசோதாவில் நீக்கப்பட்டு உள்ளது. இனி, கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கலாம். எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விபரத்தை, நிறுவனங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளவும், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

வரம்பு தளர்வு:


அதே சமயம், ஒரு நிதியாண்டில், எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கப்பட்டது என்பதை, நிறுவனங்கள், அவற்றின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். நன்கொடைக்கான வரம்பு தளர்த்தப்பட்டு உள்ளதால், அரசியல் கட்சிகளிடம், கணக்கில் காட்டாத கறுப்புப் பணம் புழங்குவது குறையும். நிறுவனங்கள், வெளிப்படையாக நன்கொடை விபரங்களை தெரிவிக்க முடியும். அரசியல் கட்சிகளுக்கு, கணக்கில் காட்டாத பணம் செல்வதை தடுக்கவே, நன்கொடைக்கான வரம்பை, அரசு தளர்த்தி உள்ளது.

தற்போது, அரசியல் கட்சிகள், ரொக்கத்தில் நன்கொடை பெறுவதற்கான வரம்பு, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது; வரம்பிற்கு மேற்பட்ட தொகையை பெற்றால், நன்கொடை அளித்தவரின் விபரங்களை, அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை