பேட்டிங் பயிற்சியை தவிர்த்தார் கோஹ்லி

தினகரன்  தினகரன்

தர்மசாலா : ஆஸ்திரேலிய அணியுடன் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை தொடங்க உள்ள நிலையில், தோள்பட்டையில் காயம் அடைந்துள்ள இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி வலைப்பயிற்சியை தவிர்த்து ஓய்வெடுத்தார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளிடையே மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. புனேவில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றியை வசப்படுத்தின. ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்த நிலையில், கடைசி டெஸ்ட் இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தனர். ராஞ்சி டெஸ்டில் பீல்டிங் செய்தத்போது வலது தோள்பட்டையில் காயம் அடைந்த கோஹ்லி, பேண்டேஜ் போட்டுக்கொண்டு உடற்பயிற்சி மற்றும் பீல்டிங் பயிற்சி செய்தார். பேட்டிங் வலைப்பயிற்சியை தவிர்த்த அவர் பின்னர் ஓய்வெடுத்தார். எனினும், இன்று அவர் பேட்டிங் பயிற்சி மேற்கொள்வார் என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மசாலா போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விளையாடும் வாய்ப்பு இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள அவரது முழு உடல்தகுதியை சோதிக்கும் வகையிலேயே விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டியில் களமிறக்கப்பட்டார் என்றும், அவரது செயல்பாட்டை பயிற்சியாளர் பேட்ரிக் பர்ஹர்ட் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிகிறது.

மூலக்கதை