லண்டனில் நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி : போலீஸ்காரர் உட்பட 5 பேர் பரிதாப பலி

தினகரன்  தினகரன்

லண்டன் : லண்டனில் நாடாளுமன்றத்தை நோக்கி காரில் தாறுமாறாக வந்த தீவிரவாதியால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற கட்டிடத்தை ஒட்டி தேம்ஸ் நதியை கடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தில் நின்றபடி, நகரின் அழகை காண பல்வேறு சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி பகல் 2.30 மணி அளவில், நாடாளுமன்ற கூட்டம் பிரதமர் தெரசா மே தலைமையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது, வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் வந்த கார் ஒன்று, திடீரென நடைபாதையில் அதிவேகமாக ஓடத்தொடங்கியது. நடைபாதையில் சென்ற பொதுமக்கள் மீது கார் பயங்கரமாக மோதியது. பலர் தூக்கி வீசப்பட்டனர். சுற்றுலா பயணிகள், மாணவர்கள் சிலர் மீது கார் மோதி படுகாயம் ஏற்படுத்தியது.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் காரின் வேகத்தில் தப்பவில்லை. பாலத்தை கடந்து நாடாளுமன்றத்தை நோக்கி திரும்பிய கார் நடைபாதை தடுப்பில் மோதி நின்றது. காரை ஓட்டி வந்த தீவிரவாதி, காரிலிருந்து இறங்கி சிறிய கத்தியுடன் முன்னேறிச் செல்ல முயன்றான். அங்கு நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவனை தடுக்க முயன்றனர். அப்போது, கெய்த் பால்மர் என்ற போலீஸ்காரரை தீவிரவாதி கத்தியால் குத்திக் கொன்றான். மற்றொரு போலீசையும் கத்தியால் குத்த முயன்றான். இதைப் பார்த்த, ஆயுதம் ஏந்திய ஸ்காட்லாந்து யார்டு போலீசார், தீவிரவாதியை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 2 போலீசாரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பிரான்சை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து லண்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வரவில்லை. எனினும் இந்தியர்கள் தகவல் பெறுவதற்காக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தனி தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு நேற்று பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய ஆசாமி ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என கூறியுள்ள லண்டன் போலீசார் மேற்கொண்டு தகவல்களை வெளியிடவில்லை. இதுதொடர்பாக, ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டனில் பரபரப்பான பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பீதியை கிளப்பி உள்ளது.பிரதமர் மோடி கண்டனம்பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில், ‘லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நிலையில், தீவிரவாதத்தை எதிர்த்து போரிட இங்கிலாந்துடன் இந்தியா துணை நிற்கும்’ என்றார். இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கூறுகையில், ‘‘ஜனநாயக மதிப்பின் மீதான வக்கிரமான இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மதிப்பை அழித்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது’’ என கண்டனம் தெரிவித்தார். குழந்தைகளை அழைத்து வரச் சென்ற தாய் பலிபலியான 5 பேரில் ஒருவர் பெண் ஆயிஷா பிராடே (43). இவரது 2 குழந்தைகள் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தின் அருகில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வரச் சென்றபோது தான் ஆயிஷா, தீவிரவாதி ஓட்டி வந்த கார் மோதி பலியாகி உள்ளார். மற்றொரு பெண் ஒருவர், கார் மோதுவதை தவிர்க்க, தேம்ஸ் நதியில் குதித்து உயிர் தப்பி உள்ளார். 8 பேர் கைதுஸ்காட்லாந்து யார்டு துணை கமிஷனர் மார்க் ரவுலி கூறுகையில், ‘பர்மிங்காம், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடக்கிறது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு உதவிய நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. இதுவரை சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைதாகி உள்ளனர்’ என்றார்.

மூலக்கதை