தர்மசாலாவில் இந்தியா- ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தர்மசாலாவில் இந்தியா ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சி

தர்மசாலா: ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் புனேவில் நடந்த முதல் டெஸ்ட்டில் 333 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட்டில் 75 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்று பதிலடி கொடுத்தது. ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இதையடுத்து 4வது மற்றும் கடைசி டெஸ்ட் தர்மசாலாவில் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தர்மசாலா வந்தடைந்தனர்.

தொடரை கைப்பற்றும் முனைப்பில் அங்கு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முகமது ஷமி வருகை: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயம் அடைந்தார்.



தற்போது காயம் குணமடைந்து விஜய் ஹசாரே டிராபியில் தமிழகத்திற்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கலந்துகொண்டு 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். உடற்தகுதியை நிரூபித்ததால் அவர் தர்மசாலா டெஸ்ட்டில் விளையாட வாய்ப்பு உள்ளது.

இதற்காக அவர் இன்று காலை தர்மசாலா வந்தடைந்தார். இந்திய வீரர்களுடன் இணைந்து அவர் பயிற்சி மேற்கொண்டார்.

தர்மசாலா மைதானம் முதல் 3 நாட்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷமியை ஆடும் லெவனில் சேர்க்க கோஹ்லி விரும்புகிறார்.

அவர் விளையாடுவாரா என்பது நாளை தெரிந்து விடும். அவர் இடம்பெறும் பட்சத்தில் இசாந்த் சர்மாவை அணியில் இருந்து நீக்கலாம் என தெரிகிறது.



முதல் டெஸ்ட்:  இது தர்மசாலா மைதானத்தில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியாகும். இதற்கு முன் இங்கு 3 ஒருநாள் மற்றும் 8 டி. 20 போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இந்தியா 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு டி. 20யில் தென்ஆப்ரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது.

இங்கு நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும், முதல் டி. 20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இந்த ரெக்கார்டு ரசிகர்களை கவலை அடையச் செய்தாலும் இங்கு நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெறும் என ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் நம்பிக்கையில் உள்ளனர்.



.

மூலக்கதை