ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடத்தை பிடிப்பார்...: வாவ்ரிங்கா கணிப்பு

தினகரன்  தினகரன்

ஜூரிச் : ஏடிபி டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைப்பார் என சக வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா கூறியுள்ளார். டென்னிசில் மகத்தான சாதனை வீரராக விளங்கும் பெடரர் (35 வயது), கடந்த ஆண்டு காயம் காரணமாக அவதிப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு 6 மாதம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இனி அவரால் பழைய வேகத்துடன் விளையாட முடியாது, ஓய்வு முடிவை அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொஞ்சமும் மனம் தளராமல் உடல்தகுதியை மேம்படுத்திய அவர் கடுமையாக பயிற்சி செய்து நடப்பு சீசனின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் ரபேல் நடாலின் சவாலை முறியடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். நான்கரை ஆண்டுகளில் அவர் வென்ற பெரிய பட்டம் இது தான். மொத்தம் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் வெற்றிப்பயணத்தை தொடரும் அவர், சமீபத்தில் நடந்த இண்டியன் வெல்ஸ் தொடரின் பைனலில் சக வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை முத்தமிட்டார்.நீண்ட நாட்களாக போட்டிகளில் விளையாடாததால் தரவரிசையில் 17வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்த அவர், படிப்படியாக முன்னேறி தற்போது 6வது இடத்தை பிடித்துள்ளார். இது குறித்து வாவ்ரிங்கா கூறுகையில், ‘ரோஜரின் ஆட்டத்தில் பழைய வேகம் தெரிகிறது. மிகச் சிறப்பாக விளையாடுகிறார். ஆட்ட முறையிலும் பல மாற்றங்களை செய்துள்ளார். இந்த பார்மில் அவரை வீழ்த்துவது மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். இதே வேகத்தில் போனால், விரைவில் அவர் மீண்டும் நம்பர் 1 இடத்தை கைப்பற்றி மகத்தான சாதனை படைப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம், ரபேல் நடாலும் காயத்தில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடத் தொடங்கி இருக்கிறார். ஜோகோவிச், மர்ரே ஆகியோரும் முழு உடல்தகுதியுடன் களமிறங்கினால் முதல் இடத்தை பிடிக்க கடுமையான போட்டி இருக்கும். இது ஆண்கள் ஒற்றையர் பிரிவை மேலும் சுவாரசியமாக்கும். ரசிகர்களுக்கும் சரியான விருந்தாக அமையும்’ என்றார். அமெரிக்காவின் ஆந்த்ரே அகாசி 33 வயதில் முதலிடத்தை பிடித்ததே முந்தைய சாதனையாக உள்ளது. பெடரர் தனது 35வது வயதில் உலகின் நம்பர் 1 வீரராகி அந்த சாதனையை தகர்ப்பார் என எதிர்பார்க்கலாம்.

மூலக்கதை