இமேஜை டேமேஜாக்க முயற்சிக்கிறது ஆஸி. மீடியா...: கோஹ்லிக்கு கிளார்க் ஆதரவு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு இருக்கும் நற்பெயரை கெடுக்க ஆஸ்திரேலியாவை சேர்ந்த சில ஊடகங்கள் முயற்சிப்பதாக ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ள கோஹ்லி, ஆஸ்திரேலிய அணியுடன் தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் அந்த அணி வீரர்கள் வார்த்தைப்போரில் இறங்கும்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இதை ஆஸ்திரேலிய மீடியா கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. ‘சர்ச்சைகளை கிளப்புவதில் விளையாட்டுத் துறையின் டொனால்டு டிரம்ப்பாக விளங்குகிறார் கோஹ்லி’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ஒப்பிட்டு ‘டெய்லி டெலிகிராப்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து மைக்கேல் கிளார்க் கூறியதாவது: டிரம்ப்புடன் கோஹ்லியை ஒப்பிடுவது கீழ்த்தரமானது. கோஹ்லி நடந்துகொள்வதை போலத்தான் ஸ்டீவன் ஸ்மித்தும் நடந்து கொள்கிகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கோஹ்லியை நான் மிகவும் விரும்புகிறேன். ஆஸ்திரேலிய மக்களுக்கும் அவரை பிடிக்கும். சவால்களை எதிர்கொள்வதில் அவரது ஆக்ரோஷமான அணுகுமுறையையும், அதிரடியான பேட்டிங்கையும் பார்க்கும்போது, அவரை ஒரு ஆஸ்திரேலியராகவே எண்ணத் தோன்றுகிறது. ஒரு சில நிருபர்கள் தான் அவருக்கு இருக்கும் நல்ல இமேஜை கெடுக்கும் வகையில் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுகின்றனர். இதை கோஹ்லி பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆஸி. மீடியா சொல்வதை ஸ்மித்தும் கூட கண்டுகொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். தர்மசாலாவில் வெற்றி பெறுவதில் மட்டுமே அவர்களின் கவனம் இருக்கும். கோஹ்லி மன உறுதி மிக்கவர். கடைசி டெஸ்டில் அவர் பெரிய செஞ்சுரி அடித்து இந்தியா தொடரை கைப்பற்ற உதவினால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அவர் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இவ்வாறு கிளார்க் கூறியுள்ளார்.

மூலக்கதை