இரட்டை இலை: இரு தரப்பு விவாதம் நிறைவு பெற்றது இன்று இரவு அல்லது நாளை முடிவு அறிவிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
இரட்டை இலை: இரு தரப்பு விவாதம் நிறைவு பெற்றது இன்று இரவு அல்லது நாளை முடிவு அறிவிப்பு

 ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது.

 
இந்நிலையில் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12–ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
 
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் டெல்லி சென்று தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்தித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
அதை தொடர்ந்து சசிகலா அணியினர் நசீம் ஜைதியை சந்தித்து, பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்களே இப்போது அவரது நியமனத்தை எதிர்ப்பதாகவும், இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
சசிகலாவுக்கு நோட்டீசு
 
இந்நிலையில் தங்கள் தரப்பு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கூடிய பிரமாண பத்திரத்தை 20–ந் தேதிக்குள் தாக்கல் செய்யக்கோரி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீசு அனுப்பியது. இதற்கு சசிகலா தரப்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டதால் 21–ந் தேதி (நேற்று) மாலை 5 மணிக்குள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தேர்தல் கமி‌ஷன் கேட்டுக்கொண்டது.
 
அதன்படி அ.தி.மு.க. வக்கீல்கள் எஸ்.செந்தில், பி.வி.செல்வம், எஸ்.திவாகர் ஆகியோர் சசிகலா தரப்பில் பிரமாண பத்திரங்களை நேற்று தேர்தல் கமி‌ஷனில் தாக்கல் செய்தனர். அதில் 38 எம்.பிக்கள், 122 எம்.எல்.ஏக்கள், 50 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 1,915 பேர் கையெழுத்திட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் அந்த மனுவில் தங்கள் தரப்பில் கட்சியின் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவாக இருப்பதாகவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தொடர்பில்லாதவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. கட்சியின் பெருவாரியான உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் உள்ளனர். மிகச்சிலரே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். எனவே அவர்கள் கட்சியின் சின்னத்தை பெற எந்த வகையிலும் தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.
 
இதை தவிர சசிகலா தரப்பில் 6 டி.வி.டிக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற அனைத்தும் உள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சசிகலாவின் நியமனத்தை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இதை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் இன்று (புதன்கிழமை) இறுதி விசாரணை நடத்துகிறது. இதில் சசிகலா அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். இந்த விசாரணைக்கு பின்னர் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை தேர்தல் கமி‌ஷன் அறிவிக்கும்.
 
ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. 27–ந் தேதி மாலை, போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் போது அவர்களுக்கான சின்னமும் ஒதுக்கப்படும்.
 
எனவே அதற்கு முன்னதாகவே, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்து அறிவித்து விடும். ஒருவேளை அந்த சின்னம் முடக்கப்பட்டால் டி.டி.வி.தினகரனுக்கும், மதுசூதனனுக்கும் வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
 
இன்று காலை தேர்தல் ஆணையத்தில் ஆணையர் நஜீம் சைதி முன்னையில் இன்று விசாரணை  தொடங்கியது. சசிகலா அணி சார்பில் காங்கிரசை சேர்ந்த வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் வாதம், மோகன் பராசரன், அரிமா சுந்தரம் ஆகியோர் வாதிட்டனர்.ஓபிஎஸ் அணி சார்பில் மனோஜ்பாண்டியன், குருகிருஷ்ண குமார், வைத்திய நாதன் ஆகியோர் வாதிட்டு வருகின்றனர்.
 
இந்த விசாரணையில் இருதரப்பு ஆதரவு எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.இந்த விசாரணை பிற்பகல் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு தரப்பிலும் 3 வக்கீல்கள் வாதம் புரிகின்றனர்.
 
ஓபிஎஸ் அணி  முதலில் வாதத்தை தொடங்கியது.ஓபிஎஸ் அணி சார்பில் வாதிடும் போது  
 
போட்டியிட தகுதியில்லாத சசிகலா வேட்பாளரை அறிவிப்பதா? சசிகலாவின் பொதுச் செயலாளர் தேர்வு கேள்விக்குறியாக இருக்கும் போது அவர் வேட்பாளரை நியமிப்பது முறையல்ல.இரட்டை இலை சின்னத்தை அளிப்பது சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதற்கு சமம், எனவே தேர்தல் ஆணையம் அவர்களுக்கு சின்னம் வழங்கக்கூடாது.சசிகலா அறிவித்த வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு புறம்பானது.தண்டனைக்குள்ளான சசிகலாவுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டால், இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக அமைந்துவிடும். என பன்னீர்செல்வம் அணி சார்பில் வாதம், எடுத்து வைக்கபட்டது.
 
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில், சசிகலா தரப்பின் இறுதி வாதம் நடைபெற்றது.அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் சார்பில் வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் வாதிட்டார்.
 
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு வாதம் நிறைவு பெற்றதும் வெளியில் வந்த இரு தரப்பினரும் தங்களுக்கே இரட்டை இலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறினர்.
 
இரட்டை இலை சின்னம் குறித்து மட்டுமே வாதம் நடைபெற்றது, பொதுச்செயலாளர் நியமனம் குறித்து வாதிடவில்லை என் நவநீத கிருஷ்ணன் கூறினார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என நம்புகிறோம் - பன்னீர்செல்வம் தரப்பு எம்.பி. மைத்ரேயன் கூறினார்.
 

மூலக்கதை