வார்த்தை போரை தொடங்கியது இந்தியாதான்; ஆஸ்திரேலியா அல்ல... - மிட்செல் ஸ்டார்க் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வார்த்தை போரை தொடங்கியது இந்தியாதான்; ஆஸ்திரேலியா அல்ல...  மிட்செல் ஸ்டார்க் பேட்டி

புது டெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில், இரு அணி வீரர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் காயத்தை கிண்டல் செய்யும் வகையில் தோள்பட்டையை பிடித்து கொண்டு மேக்ஸ்வெல் நடித்தது, இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்கத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் அவமதித்ததாக விராட் கோஹ்லி குற்றம் சாட்டியது, இந்தியாவுக்கு சாதகமாக ‘பிட்ச்’ தயார் செய்யப்படுகிறது என்ற ஆஸ்திரேலிய ஊடகங்களின் புகார் என இந்த தொடரில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, ‘சர்ச்சைகளை கிளப்புவதில் விளையாட்டு துறையின் டொனால்ட் டிரம்ப்பாக (அமெரிக்க அதிபர்) விராட் கோஹ்லி இருப்பதாக’ ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனிடையே வார்த்தை போரை தொடங்கியது இந்தியாதான் என்றும், ஆஸ்திரேலியா அல்ல என்றும், இந்த விவகாரத்திற்கு மேலும் காரம் சேர்க்கும் வகையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேட்டியளித்துள்ளார்.

வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்டுடன், தொடரில் இருந்து விலகியுள்ள அவர், அந்த போட்டியில் அபினவ் முகுந்த், அஸ்வின் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
 
மிட்செல் ஸ்டார்க் அளித்த பேட்டி: வார்த்தை போரில் ஈடுபடும் செயல் எங்களை விட அவர்களிடம் (இந்தியா) இருந்துதான் அதிகம் வந்தது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இது உருவாக்கப்பட்டு விட்டது. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து, முதல் டெஸ்டில் நாங்கள் வீழ்த்தினோம்.

இதனால் இந்திய வீரர்கள் எங்களை பார்த்து அச்சப்பட்டனர். ஆனால் பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்டில் இந்திய வீரர்கள் மிக மிக சிறப்பாக விளையாடினர்.

காயம் காரணமாக, வியாழக்கிழமை (நாளை) மருத்துவ நிபுணரை சந்திக்க உள்ளேன். இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


.

மூலக்கதை