உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி உள்துறை மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!!!

PARIS TAMIL  PARIS TAMIL
உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி உள்துறை மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!!!

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார், சுந்தரம், சத்தியபாமா உள்பட 12 பேர் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்புகேட்டு ஒரு கடிதத்தை வழங்கினார்கள். பின்னர் டாக்டர் மைத்ரேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. இதை பொறுக்க முடியாத சசிகலா அணியினர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.

உச்சக்கட்ட பாதுகாப்பு

சென்னை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என்று பகிரங்கமாக சொன்னார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைந்தபிறகு, அந்த முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
புதிய முதல்-அமைச்சர் பதவியேற்ற அன்று இரவு சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டு முன் கல்வீசப்பட்டது. அதைப்போல பெரியகுளத்தில் உள்ள அவரது வீடு, போடியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்களும் தாக்கப்பட்டன. கடந்த வாரம் அவர் தனது சொந்த தொகுதியில் பயணம் செய்தபோதும் தாக்குதல் நடந்தது.

இப்படி மிரட்டலும், தாக்குதலும் தொடர்வதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்துறை மந்திரியிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அவர் புலனாய்வுத்துறை மூலம் விசாரணை நடத்தி உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.

இரட்டை இலை சின்னம்

வேட்பாளர் மதுசூதனனுக் கும் தொலைபேசி மூலமாக தொடர்ந்து மிரட்டல் வருகிறது. எனவே, அவருக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம். தமிழக போலீஸ் பாதுகாப்பு சரியாக இல்லை.
தேர்தல் ஆணையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் விசாரணை வக்கீல்களின் வாதமாகத்தான் இருக்கும். நாங்கள் தான் அ.தி.மு.க. எனவே, இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை