இந்தியாவுக்கு விளையாடுவதுதான் எப்போதும் கனவு - தினேஷ் கார்த்திக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவுக்கு விளையாடுவதுதான் எப்போதும் கனவு  தினேஷ் கார்த்திக்

புதுடெல்லி: விஜய் ஹசாரே டிராபியின் இறுதி போட்டி, டெல்லி பெரோ ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தமிழ்நாடு 47. 2 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 112 ரன்கள் எடுத்தார். பெங்கால் தரப்பில் முகமது ஷமி 4, அசோக் டிண்டா 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இதன்பின் பேட் செய்த பெங்கால் 45. 5 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 37 ரன் வித்யாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘முகமது ஷமி, அசோக் டிண்டா, கனிஷ்க் சேத் ஆகியோர் போட்டியின் தொடக்கத்தில் பந்து வீசிய விதம் தனித்துவமானது.

குறிப்பாக அசோக் டிண்டா தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். இந்த சரிவில் இருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது.



நான் பேட்டிங் செய்த விதம் எனக்கு திருப்தியை ஏற்படுத்தியது. எங்கள் பவுலர்களும் சிறப்பாக விளையாடினர்.

பெங்கால் அணி பார்ட்னர்ஷிப் அமைக்க முயலும் போதெல்லாம், எங்கள் பவுலர்கள் அந்த பார்ட்னர்ஷிப்பை முறியடித்தனர். விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்ற, டிஎன்பில் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) தொடர் எங்களுக்கு மிகவும் உதவியது’ என்றார்.


இதனிடையே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் ஜூன் 1-18 வரை நடைபெறுகிறது. இதில், விளையாடுவோம் என்ற எதிர்பார்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், ‘இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதுதான் எப்போதும் எனது கனவு.

அதுதான் எனது இலக்கும் கூட. அந்த இலக்கை அடைய மிகவும் கடினமாக முயற்சி செய்து வருகிறேன்.

பேட்டிங்தான் எனது பலம் என்பதை உணர்ந்துள்ளேன்.

கீப்பிங் செய்வதையும் விரும்புகிறேன்’ என்றார்.

.

மூலக்கதை