மத்திய கிழக்கு நாட்டவர்களுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடு : விமானத்தில் மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல நிபந்தனை

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 10 விமான நிலையங்களில் இருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்படும் விமானங்களில் மடிக்கணினி, கேமரா உள்ளிட்ட சாதனங்களை கையில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மடிக்கணினி, DVD பிளேயர், ஐபேட், கேமராக்கள் மற்றும் வீடியோ கேம் சாதனங்களை பயணிகள் கையில் வைத்து கொண்டு பயணம் செய்ய அமெரிக்க அரசு இன்று முதல் தடை விதித்துள்ளது. அதே பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சூட்கேஸ் உள்ளிட்ட மூடப்பட்ட உடமைகளில் வைத்து எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் கெய்ரோ, ஜோர்டானின் அம்மான், குவைத்தின் குவாத் சிட்டி, மொராக்கோவின் கசபாலான்கா, கத்தாரின் தோகா, சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா, துருக்கியின் இஸ்தான்புல், ஐக்கிய அரசு எமிரேட்சின் அபுதாபி மற்றும் துபாய் ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்களில் தடை தொடரும். இந்த தடைக்கான கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் செல்போன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சார்ந்த பொருட்களை எடுத்து செல்ல கட்டுப்பாடு கிடையாது. இந்த நிபந்தனைகள் எதுவும் அமெரிக்கர்களுக்கு பொருந்தாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தீவிரவாத அச்சுறுத்தலை கருத்தில் கொண்டும், பாதுகாப்பு கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். கடந்த வாரம் ஏமனை சேர்ந்த தீவிரவாதிகள் அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுத்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஜோடானில் இருந்து சிகாகோவிற்கு சென்ற பயணிகள் இடையே திடீர் என இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் அவர்கள் செய்வதறியாது தவித்தனர். முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிநாட்டவர்களுக்கு பாதகமாக இருப்பதாக அவர்கள் ஆட்டேசபம் தெரிவித்தனர்.

மூலக்கதை