சட்டசபை நிகழ்வுகள் குறித்த வீடியோ பதிவை தாக்கல் செய்யவேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
சட்டசபை நிகழ்வுகள் குறித்த வீடியோ பதிவை தாக்கல் செய்யவேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சட்டசபை நிகழ்வுகள் குறித்த வீடியோ பதிவை தாக்கல் செய்யவேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்த வீடியோ காட்சியை தாக்கல் செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தரப்புக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-

கூவத்தூரில் பிடித்துவைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். இதன்படி, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்த தமிழக கவர்னர், அவரை 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து, கடந்த 18-ந் தேதி தமிழக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார். சட்டசபைக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கூவத்தூரில் இருந்து நேரடியாக அழைத்துவரப்பட்டதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது. அதனால், நம்பிக்கை தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பை மற்றொரு நாளில் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

இதை சபாநாயகர் ஏற்காததால், ஓட்டெடுப்பை ரகசியமாக நடத்தவேண்டும். வெளிப்படையான ஓட்டெடுப்பை நடத்தக்கூடாது என்று தி.மு.க., காங்கிரஸ் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் மற்றொரு கோரிக்கையும் விடப்பட்டது.

இந்த கோரிக்கையையும் சபாநாயகர் உள்நோக்கத்துடன் நிராகரித்துவிட்டார். இதனால் ஏற்பட்ட அமளியில், சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மதியம் 1 மணிக்கு சபை கூடியபோது, தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கும், வெளியில் இருந்து வந்திருந்த போலீசாருக்கும் சபாநாயகர் உத்தரவிட்டார். சபையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தார்.

சபாநாயகர் அவையில் இல்லாதபோது, கூடுதல் போலீஸ் கமிஷனர் சேஷசாயி தலைமையில் போலீசார் உள்ளே புகுந்து, தி.மு.க. உறுப்பினர்களாகிய எங்களை வெளியேற்றினார்கள். அப்போது போலீசார் எங்களை ‘பூட்ஸ்’ கால்களால் எட்டி உதைத்தும், கைகளால் அடித்தும் துன்புறுத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் பலர் படுகாயமடைந்தனர். என்னுடைய சட்டையும் கிழிக்கப்பட்டது.

இதேபோல, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வும் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, ஜனநாயகத்துக்கு விரோதமாக நம்பிக்கை ஓட்டெடுப்பை சபாநாயகர் நடத்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டார். சபாநாயகரின் இந்த செயல் சட்டவிரோதமானதாகும்.

எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, அந்த ஓட்டெடுப்பு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்த முடிவிற்கு தடை விதிக்கவேண்டும். இந்த முடிவினை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்யவேண்டும்.

அதுமட்டுமல்லாமல், எந்தவொரு உறுப்பினர்களையும் வெளியேற்றாமல் மீண்டும் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பை ரகசிய முறையில் நடத்தவும், இந்த ஓட்டெடுப்பை கண்காணிக்க தமிழக கவர்னரின் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்தும் உத்தரவிட வேண்டும். அதுவரை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை, எந்த ஒரு கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கையுடன் சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், வக்கீல் என்.எல்.ராஜா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவற்றின் விவரம் பின்வருமாறு:-

மூத்த வக்கீல்:- நம்பிக்கை தீர்மானத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்கவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் சபாநாயகர் ஆரம்பம் முதலே செயல்பட்டுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பை நடத்தியுள்ளார். இந்த தீர்மானத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சுதந்திரமாக ஓட்டுபோட முடியவில்லை. அவர்களுக்கு பலவிதமான நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன.

நீதிபதிகள்:- இப்போதெல்லாம் எந்த எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக ஓட்டுபோடுகின்றனர். இதுபோன்ற நிலைமை தமிழகத்தில் மட்டுமல்ல, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும் நடக்கிறது. இந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வத்தை ஏன் எதிர்மனுதாரராக சேர்த்துள்ளர்கள்?

வக்கீல்:- தி.மு.க. உறுப்பினர்களை சபையை விட்டு வெளியேற்றிய பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு உறுப்பினர்கள் மட்டும் இருந்ததால், அவரை எதிர்மனுதாரராக சேர்த்தோம்.

நீதிபதிகள்:- சட்டசபையில் என்ன நடந்தது? என்பதற்கு ஆதரமாக ஏதாவது வீடியோ பதிவு உங்களிடம் உள்ளதா?

வக்கீல்:- வீடியோ பதிவு சட்டசபை செயலாளர் வசம் உள்ளது. அந்த வீடியோ பதிவை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்று மனுதாரர் இந்த வழக்கில் கோரியுள்ளார்.

நீதிபதிகள்:- முதலில் மனுதாரர் தரப்பிடம் உள்ள வீடியோ பதிவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள். அதை பார்த்து, திருப்தி அடைந்தால், இந்த வழக்கிற்கு பதிலளிக்க எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீசு அனுப்பப்படும்.

வக்கீல்:- வீடியோ பதிவு எதுவும் எங்களிடம் இல்லை.

நீதிபதிகள்:- தொழில்நுட்பம் முன்னேற்றிவிட்டது. எனவே, தங்களிடம் இருக்கும் வீடியோ பதிவை முதலில் தாக்கல் செய்யுங்கள். அதன்பின்னர் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த வழக்கை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதே நேரம், இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் தேவையில்லாத நபர்களை நீக்கவேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மூலக்கதை