ஜெனிவாவில் மூன்று நாட்கள் நடக்கவுள்ள சிறிலங்கா குறித்த விவாதங்கள்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ஜெனிவாவில் மூன்று நாட்கள் நடக்கவுள்ள சிறிலங்கா குறித்த விவாதங்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், மார்ச் 22ஆம் நாள் சிறிலங்கா குறித்த ஐ.நாமனித உரிமை ஆணையாளரின்  அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் வரும் 27ஆம் நாள் தொடக்கம், மார்ச் 24ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில், சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐ.நாமனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு அமைவாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்த பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கும் விரிவான அறிக்கை இதுவாகும்.

இந்த அறிக்கை குறித்து வரும் மார்ச் 22ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் வாதிக்கப்படும்.

அதேவேளை, இந்தக் கூட்டத்தொடரில், கடந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த  ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் இருவரின் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டு பேரவையில் விவாதிக்கப்படவுள்ளன.

சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சர் சமர்ப்பிக்கும் சிறிலங்கா தொடர்பான அறிக்கை மீது, வரும் மார்ச் 02ஆம் நாள் விவாதிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா மற்றும் இரண்டு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் சமர்ப்பிக்கும் ஆண்டு அறிக்கை குறித்து மார்ச் 15ஆம் நாள் பேரவையில் விவாதம் நடைபெறவுள்ளது.

மூலக்கதை