டெல்லி தனியார் மருத்துவமனையில் 55 வயது நபரின் அடிவயிற்றில் இருந்த 11.5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த 55 வயது நபரின் வயிற்றில் இருந்த 11.5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. இவ்வளவு எடை கொண்ட கட்டியை அகற்றுவது உலகில் இதுவே முதல் முறை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வசந்த்கன்ஞ்ச் போர்டிஸ் மருத்துவமனை மருத்துவர் ரந்தீப் கூறியதாவது: டெல்லியைச் சேர்ந்தவர் அஸ்வினி மர்வாஸ் (55). கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு உடலின் எடை அளவுக்கு அதிகமாக கூடிக்கொண்டே சென்றது. இதையடுத்து மருத்துவர்களை அணுகினார் மர்வாஸ்.  அவரை பரிசோதித்ததில், மர்வாசுக்கு இரண்டாம் வகை சர்க்கை வியாதி மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அவரது எடை சுமார் 125 கிலோவாக இருந்தது. இதையடுத்து உடலின் எடையை குறைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தனர். இதனிடையே, அவரது பிற மருத்துவ பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ததில், அடிவயிற்றில் கட்டி இருப்பதும் தெரியவந்தது. இதன் சுற்றளவு சுமார் 30 x 25 செ.மீ. என்ற அளவுக்கு வளர்ந்து வயிற்றின் இடது பகுதியில் இருந்தது. மேலும், வலது பகுதிக்கும் பரவிய நிலையில் இருந்தது. ஆனால், வயிற்றில் வளர்ந்திருந்த இந்த கட்டி பற்றி மர்வாஸ் அறிந்திருக்கவில்லை. இந்த கட்டியானது அவரது சிறுநீரக பகுதியினை ஒட்டி வளரதொடங்கியதும் பரிசோதனையில் தெரியவந்தது. ஆனால், அவருக்கு உடலில் இருந்த கட்டியை அகற்றுவதில் பெரிய சவால் காத்திருந்தது. குறிப்பாக, ஏற்கனவே சர்க்கரை வியாதி மற்றும் உயர் ரத்த அழுத்த நோயின் காரணமாக சிறுநீரகத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்வது ஆபத்தான காரியமாக இருந்தது. இருப்பினும் அவரது நிலையை உணர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்ற இறுதியாக முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் மர்வாசின் அடிவயிற்றில் பெரிய அளவில் கீறலை ஏற்படுத்தி கடந்த நவம்பர் 22ம் தேதி கட்டி அகற்றப்பட்டது. கட்டியின் எடை சுமார் 11.5 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதேபோன்ற அறுவை சிகிச்சையில் இதற்கு முன்பாக 7.5 கிலோ எடையுள்ள கட்டியை கடந்த 2013ம் ஆண்டில் நோயாளி ஒருவருக்கு அகற்றப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. இதனால் தற்போது அகற்றப்பட்டுள்ள இந்த கட்டிதான் அதிக மேடை கொண்டது என்கிற இடத்தை பெற்றுள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் அவர் உள்ளார். இவ்வாறு டாக்டர் தெரிவித்தார்.

மூலக்கதை