எம்சிடி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் 15,000 வாக்குப்பதிவு இயந்திரம் தயார்: மாநில தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: மூன்று மாநகராட்சிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரம் தேர்தல் நடத்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், மார்ச் மாதம் முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதையொட்டி, தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வார்டுகளின் எல்லை குறித்த வரையறை முடிக்கப்பட்ட உடன், வாக்குசாவடிகள் அமைக்கும் பணிகள் தொடங்கும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார். இதனை மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறுகையில், “மாநகராட்சி தேர்தலுக்காக 15,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்தும் முன்பாக பொறியாளர்கள் பரிசோதனை செய்வார்கள்” என்றார். மாநகராட்சி தேர்தல் ஏப்ரல் 27ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்க வேண்டும். ஆனால், வார்டு எல்லையை மறுசீரமைக்கும் விவகாரத்தில் காலதாமதம் செய்வதாக ஆம் ஆத்மி அரசு மீது மாநில காங்கிரஸ் மற்றும் பாஜ கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை