தந்தையே சிறுமியை கெடுத்தாராம் பகீர் கடிதம் தயாரித்த நாசகார ஆசிரியர்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பெற்ற தந்தையே சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்தார் என போலி கடிதம் உருவாக்கிய ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 3 ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர். வடமேற்கு டெல்லி அமான் விகார் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எழுத்தறிவில்லாத பெற்றோரின் சிறுமி 5ம் வகுப்பு படிக்கிறார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், படிப்பு சம்பந்தமாக கேள்வி எழுப்பிய சிறுமியை, பதிலளிப்பதாகக் கூறி, யாருமில்லாத வகுப்பறையில் வைத்து ஆசிரியர் பலாத்காரம் செய்துள்ளார். வலி பொறுக்காமல் கதறித்துடித்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கதறியழுது முறையிட்டார். மறுநாள், பள்ளியில் புகார் அளிக்க வந்த தந்தையை, கடுமையாக மிரட்டிய ஆசிரியர் வெளியில் சொன்னால் நடப்பதே வேறு என எச்சரித்தார். அதன் பிறகு, சிறுமியின் தந்தையிடம் வெற்றுத்தாளில் கைநாட்டு வாங்கிக் கொண்டு அனுப்பினார். பள்ளிக்கு பெற்றோர் வந்து சென்றதை அடுத்து, ஆசிரியருக்கு உள்ளுக்குள் கிலி ஏற்பட்டது. எனவே, சக ஆசிரியர்களுடன் ஆலோசித்தார். அதன் பிறகு, உருவான கூட்டு சதியின்படி, ‘‘தந்தையே மகளை பலமுறை பலாத்காரம் செய்தார்’, என கைநாட்டு வாங்கப்பட்ட தாளில் அவர்கள் சுயமன்னிப்பு கடிதம் உருவாக்கினர். இந்த திட்டத்திற்கு தலைமை ஆசிரியரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனிடையே சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் தொடுத்த வழக்கு கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி வினோத் யாதவ் முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வந்தது. வழக்கில், ஆசிரியர் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளை போலீசார் பதிவு செய்திருந்தனர். வழக்கை எதிர்பார்த்த ஆசிரியர், சிறுமியின் தந்தை அளித்த கடிதம் என பொய்யாக உருவாக்கிய கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.நேற்று நடந்த விசாரணையின் போது வழக்கில் முன்னேற்றம் ஏற்படாததைக் கண்டு போலீசாரை அறிவுறுத்தி நீதிபதி கூறுகையில், ‘‘ஆசிரியர் தான் கொடுமை செய்தவர் என புகாரில் உறுதிபட சிறுமி தெரிவித்த பின்னரும், கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்காத போலீசாரின் நடவடிக்கை அதிருப்தி அளிக்கும் விதத்திலும், சந்தேகம் எழுப்பவதாகவும் உள்ளது’’, என்றார். நீதிபதியின் கருத்துக்கு நேரில் ஆஜராகி பதிலளித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் மேலும் 3 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது ஏமாற்றுதல், மோசடி, பொய் கடிதம் உருவாக்கியது, கூட்டாக குற்றசதி தீட்டியது போன்ற பின்னணிகளில் ஐபிசி மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். விசாரணையை அடுத்த 4 வாரத்தில் முடித்து விடுவோம்’’, என தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘‘விசாரணை முடித்த பின்னர் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பிக்கும் அறிக்கை அல்லது குற்ற பத்திரிகை அடிப்படையில் மார்ச் மாதத்தில் வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு பட்டியலிடப்படும்’’, என அறிவித்தார்.

மூலக்கதை