கவர்னர் பைஜால் அதிரடி: டிடிஏ நிலம் ஆக்கிரமிப்பு விவரம் 2 மாதத்தில் அறிக்கை தர உத்தரவு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், டிடிஏ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இரு வாரங்களுக்கு ஒரு முறை டிடிஏ அதிகாரிகளை ஆளுநர் சந்திப்பது வாடிக்கை. இதுபோன்ற கூட்டம் நேற்று ராஜ் பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூத்த டிடிஏ அதிகாரிகள், அதன் துணைத் தலைவர் உதய் பிரதாப் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இது குறித்து ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த வார கூட்டத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் அறிக்கை சமர்பித்தனர். குறிப்பாக நில நிர்வாக பிரச்னைகள் குறித்து அறிக்கை அளித்தனர்.  நேற்றைய கூட்டத்தில் நகரிக் சுவித்யா கேந்திராக்கள் எனப்படும் மக்கள் வசதி மையங்களை அமைக்க அனில் பைஜால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  டிடிஏ ஆன்லைன் இணையதளத்தில் பொது மக்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணும் வசதி இடம் பெற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.இது டிடிஏ அலுவலகங்களில் மக்கள் கூடுவதை குறைக்க உதவும். டிடிஏவின் நில ேமலாண்மை பிரிவுக்கு இரண்டு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. டிடிஏ நிலத்தை ஆக்ரமித்தவர்கள் குறித்த விவரங்கள் தாக்கல் செய்வதுடன், அவற்றை அகற்ற எடுக்க வேண்டிய செயல் திட்டமும் சமர்ப்பிக்க வேண்டும்.  அத்துடன் இதுவரை லே-அவுட் திட்டம் செய்யப்படாத இடங்களை அடையாளம் கண்டு தெரிவிக்க வேண்டும். இதனால் அவை பசுமை பகுதியாக அறிவிக்கப்படும். ஆக்கிரமிப்பு தவிர்க்கப்படும். இந்த உத்தரவுகளை முழுமை அமைப்பு பணி முறையில் குறிப்பிட்ட காலத்தில்  செயல்படுத்த வேண்டும் என்றும் அனில் பைஜால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை