புதிய சட்டத்தின் கீழ் 235 வழக்குகள் பதிவு, ரூ.55 கோடி பினாமி சொத்து பறிமுதல் : வருமான வரித்துறை அதிரடி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: புதிய பினாமி சட்டத்தின் கீழ் 235 வழக்குகளை பதிவு செய்துள்ள வருமான வரித்துறை, இதுவரை சுமார் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.  கருப்பு பண புழக்கத்தை தடுப்பதற்காக 1988ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பினாமி பரிவர்த்தனை சட்டத்தில் முக்கிய திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம், கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பினாமி பெயரில் சொத்து பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழி உள்ளது.  இதுமட்டுமின்றி, பினாமி சொத்துகளை இழப்பீடு எதுவும் அளிக்காமல் பறிமுதல் செய்யவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன்படி வருமான வரித்துறை 235 வழக்குகள் பதிவு செய்து 55 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வருமான வரித்துறை சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:  புதிய பினாமி சட்டத்தின் கீழ் இந்த மாதம் வரை மொத்தம் 235 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 140 வழக்குகளில் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  இதில் 124 வழக்குகளில் இதுவரை  ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.  இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பறிமுதல் செய்யப்பட்ட பினாமி சொத்துக்களில் வங்கி கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட்கள், விவசாய நிலம் உள்ளிட்ட மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஜூவல்லரி ஆகியவையும் அடங்கும்’’ என்றார்.

மூலக்கதை