ராஜ்பவனில் தலைமைகாவலரின் துப்பாக்கி திருட்டு வழக்கு 11 ஆண்டுக்கு பிறகு போலீஸ்காரர் கைது

தினகரன்  தினகரன்

பெங்களூரு: ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது  உடன் பணியாற்றி வந்த தலைமை காவலரின் துப்பாக்கியை திருடிவிட்டு நாடகமாடிய சிஏஆர் தலைமை காவலரை 11 ஆண்டுகளுக்கு பின்னர் காட்டன்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு சி.ஏ.ஆர் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் புருஷோத்தமன் (50). மைசூரு ரோட்டில் உள்ள சி.ஏ.ஆர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது குடியிருப்பின் அருகே மர்ம நபர்கள் சிலர் அட்டகாசம் செய்து வருவதாக புருஷோத்தமனுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புருஷோத்தமன் காத்திருந்தார். அதன்படி பிப்.17ம்  தேதி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய புருஷோத்தமன், கண்ணில் மர்ம நபர்கள் தென்பட்டனர். வீட்டிற்கு சென்ற அவர் மனைவியிடம் மருந்து வாங்கிவிட்டு வருவதாக வெளியே சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அங்கே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் காம்பவுண்ட் சுவரில் சிறுநீர் கழித்து கொண்டிருந்தனர். அதை பார்த்த புருஷோத்தமன் தயாராக எடுத்து வந்த துப்பாக்கியை எடுத்து, மர்ம நபர்களின் ஒருவரை மிரட்டினார். இவரது நடவடிக்கையில் பயந்துபோன மர்ம நபர்கள் புருஷோத்தமனை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த துப்பாக்கியை பறித்து சென்றனர். இது குறித்து அவர் காட்டன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் மர்ம நபர்கள் சிலர் தன்னை வழிமறித்து தாக்கி காயப்படுத்திவிட்டு சென்றதாக கூறியிருந்தார். துப்பாக்கி பறித்து செல்லப்பட்டது குறித்து எந்த தகவலையும் அவர் புகாரில் குறிப்பிடவில்லை. அவரது புகாரை ஏற்ற காட்டன்பேட்டை போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மைசூர் ரோடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை (30) என்று தெரியவந்தது. புருஷோத்தமன் வீட்டின் அருகேயிருந்த காம்பவுண்ட் சுவரில் சிறுநீர் கழித்ததை பார்த்து ஆத்திரமடைந்த அவர் துப்பாக்கியை எடுத்து வந்து மிரட்டியதாகவும், உயிருக்கு பயந்து, துப்பாக்கியை பறித்து சென்றதாகவும் கூறினார். மேலும் பறித்து சென்ற துப்பாக்கியை அவர் போலீசார் ஒப்படைத்தார். அதை கைப்பற்றிய போலீசாருக்கு, புருஷோத்தமன்  மீது சந்தேகம் எழுந்தது. எதற்காக புகாரில் துப்பாக்கி பறித்து சென்றதை குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக புருஷோத்தமனை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். மேலும் சர்வீஸ் துப்பாக்கி எங்கே என்று கேட்டபோது, பழைய சர்வீஸ் துப்பாக்கியை எடுத்து காண்பித்தார். இதையடுத்து போலீசாருக்கு அவர் மீதான சந்தேகம் வலுத்தது. தலைமை காவலாளியாக பணியாற்றுபவருக்கு எப்படி 2 துப்பாக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இது குறித்து காட்டன்பேட்டை இன்ஸ்பெக்டர், மேற்கு மண்டல துணை கமிஷனர் அனுசேத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர் விசாரித்தபோது புருஷோத்தமன் கையில் இருப்பது 2006ம் ஆண்டு ஆளுநர் மாளிகையில் திருடுபோன துப்பாக்கி என்று தெரியவந்தது. சி.ஏ.ஆர் தலைமை காவலர் தசரத் ராவ் என்பவர் அந்த துப்பாக்கியை பயன்படுத்தினார். சம்பவத்தன்று அவர்  கழிவறைக்கு சென்று வருவதற்குள் புருஷோத்தமன் அவரது துப்பாக்கியை திருடி நாடகமாடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து பெங்களூரு மேற்கு மண்டல துணை கமிஷனர் அனுசேத் கூறியதாவது; 2006ம் ஆண்டு செப்.7ம் தேதி சி.ஏ.ஆர் தலைமை காவலர் 5 பேர் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தலைமை காவலர் தசரத் ராவின்,  துப்பாக்கி திருடுபோனது. இது தொடர்பாக விதான சவுதா போலீசார் அவர் மீது 70/2006 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் 3 முறை பதவி உயர்வு, 3 முறை ஊதிய உயர்வு தடை செய்யப்பட்டது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தையும் பாதித்தது. தந்தையின் நிலையை பார்த்து மகள் தற்கொலை செய்து கொண்டார். மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இன்றுவரை அவர் தலைமை காவலராகவே பணியாற்றி வருகிறார். தற்போது தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்து விசாரித்தபோது, துப்பாக்கி திருட்டு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  11 ஆண்டுகளாக புருஷோத்தமன், தசரத் ராவின் துப்பாக்கியை திருடி மறைத்து வைத்திருந்துள்ளார். எதற்காக இந்த நாடகமாடினார் என்று தெரியவில்லை. கைதான புருஷோத்தமன் எம்.எல்.சி மனோகர் என்பவரிடம் பாதுகாவலாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக உயர் போலீஸ் அதிகாரிக்கு பாதுகாவலாளியாக பணியாற்றியபோது, வாலிபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். மேலும் சில துப்பாக்கி சூடு மற்றும் போலி என்கவுண்டர் வழக்கில் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இந்த திருட்டு வழக்கிற்கு தீர்வு கிடைத்துள்ளது. விசாரணையில் புருஷோத்தம் கொடுத்த தகவலின் பேரில் அவரிடமிருந்து திருட்டு துப்பாக்கி மற்றும் தாக்குதல் நடத்திய வாலிபரிடமிருந்த சர்வீ–்ஸ் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான புருஷோத்தமன் மீது துப்பாக்கி திருட்டு, மோசடி, பொய் புகார் அளித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துப்பாக்கி திருட்டு தொடர்பாக விசாரிக்க போலீசார் அவரை காவலில் எடுத்துள்ளனர். விரைவில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அவர்களது உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்திருக்கிறோம் என்றார்.

மூலக்கதை