சாமுண்டி மலையில் கேமரா பொருத்த போலீஸ் முடிவு

தினகரன்  தினகரன்

மைசூரு:  மைசூரு சாமுண்டி மலையில் சிசிடிவி கேமரா பொருத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மைசூரு சாமுண்டி மலையில் கடந்த திங்கட்கிழமை மாலை ஜெர்மன் நாட்டைச் சேர்நத பெண் ஒருவருக்கு மர்ம நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இந்த சம்பவத்தை அடுத்து சாமுண்டி மலையில் சி.சி.டி.வி.  கேமரா பொருத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொர்பாக கமிஷனருக்கும் சாமுண்டி போலீசார் மனு அளித்துள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் தொல்லைக்குள்ளான சம்பவத்தில் சாமுண்டி மலைப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை உண்மையான குற்றவாளி யார் என போலீசார் கண்டுபிடிக்கவில்லை. மேலும் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க சாமுண்டி மலைப்பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தலாம் என்று போலீசார் ஆலோசித்தனர். எந்தெந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமரா தேவை என்பது குறித்து சாமுண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆய்வு நடத்தினார். சாமுண்டி மலை படிக்கட்டு தொடங்கும் இடத்தில் ஒரு சி.சி.டி.வி. கேமரா மற்றும் நடுப்புறத்தில் ஒரு சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படவுள்ளது. ஜெர்மன் பெண் பாலியல் தொல்லைக்குள்ளான நந்தி சிலை அருகே ஒரு சிசிடிவியும், மாநகரின் இயற்கையை ரசிக்க உள்ள வியூ பாயிண்ட்டிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படவுள்ளது. மேலும் குற்றச் செயல்களைத் தடுக்க மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை படிக்கட்டு வழியாக கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 மணிக்கு மேல் படிக்கட்டு வழியாக பக்தர்கள் சாமுண்டியை தரிசனம் செய்ய வருவார்கள். இதற்காக காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை படிக்கட்டு பகுதி திறந்திருக்கும். காலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது. எனவே இப்பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போலீசார் கூறியுள்ளனர். பக்தர்களுக்கு பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.சி.க்கு அனுப்பியுள்ள அறிக்கைக்கு ஓரிரு நாட்களில் பதில் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

மூலக்கதை