குப்பை திடீரென தீப்பிடித்து எரிந்து நச்சுப்புகை பெலந்தூர் ஏரியில் குப்பை எரிந்து புகை மாசு: அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்

பெங்களூரு: பெங்களூரு பெலந்தூர் ஏரியில் குவிக்கப்பட்டிருந்த குப்பை திடீரென தீப்பிடித்து எரிந்து நச்சுப்புகை வெளியேற்றியது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்ககோரி கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள பெலந்தூர் ஏரியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென கடந்த வாரம் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். 150 மீட்டர் தூரத்திற்கு தீ பரவி குபுகுபுவென கொழுந்துவிட்டெறிந்தது. புகை மூட்டத்தால் குடியிருப்பு வாசிகள் பீதி அடைந்தனர். தொடர்ந்து புகை கிளம்பியுள்ளதால், அப்பகுதி மக்களுக்கு  சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. சிலர் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். ஏரியின் மையப்பகுதியில் தீ எரிந்து 150 மீட்டர் தூரத்துக்கு பரவியது. கரும் புகை மூட்டம் காரணமாக வாகனஒட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கு  நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி மற்றும் பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெலந்தூர் ஏரியில் அடிக்கடி தீ்ப்பிடித்து புகை பரவுவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.  அப்புகார் மீதான விசாரணை நேற்று நீதிபதி சுதந்திரகுமார் முன்  வந்தது. பெலந்தூர் ஏரியில் ஏற்படும் புகை மற்றும் நுரை கிளம்புவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக முழு விவரங்களை இரண்டு வாரங்களுக்குள் பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி பெங்களூரு மாநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிக்கல் வாரியம், பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழுமம், கர்நாடக மாநில கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கர்நாடக மாநில ஏரி பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் ஆணையம் ஆகியவற்றின் ஆணையர்களுக்கு அவசர நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மூலக்கதை