துல்லா’ விமர்சன விவகார வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு விதித்த தடையை நீட்டித்தது ஐகோர்ட்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: அவதூறு பேச்சு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, விசாரணை நீதிமன்றம் விடுத்திருந்த சம்மன் மீதான தடையை மேலும் நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரை ‘துல்லா’ என இந்தியில் விமர்சனம் செய்திருந்தார். முதல்வரின் விமர்சனத்தால் மனம் நொந்த அனில் குமார் தனோஜா எனும் போலீஸ்காரர், பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அதே ஆண்டு ஜூலை 23ம் தேதி அவதூறு வழக்கு தொடுத்தார். வழக்கு மனுவில், ‘முதல்வர் பதவியில் இருப்பவர் இது போன்ற வார்த்தையால் போலீசாரை விமர்சிப்பது கவலைக்குரியது. எனவே அவர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என குறிப்பிட்டிருந்தார்.மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், ‘கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. எனவே நீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’, என கடந்த ஆண்டு ஜூலை 13ல் உத்தரவிட்டார். நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி கெஜ்ரிவால் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்ற உயர் நீதிமன்றம், ‘ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதிக்குள் ‘துல்லா’ எனும் வார்த்தைக்கு கெஜ்ரிவால் விளக்கம் அளிக்க வேண்டும்’, என உத்தரவிட்டதோடு, விசாரணை நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு தடையையும் அறிவித்தது.இதனிடையே, சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்திலி தனோஜா முறையீடு செய்தார். அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘தடை கோரி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். துல்லா என்ற வார்தையால் மனுதாரர் மட்டுமின்றி அனைத்து போலீசாரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்’, என மனுதாரர் சார்பில் வாதாடப்பட்டது.அதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். உயர் நீதிமன்றம் அறிவித்தபடி, வழக்கு விசாரணை மீண்டும் நேற்று முன்தினம் நடைபெற்றது. விசாரணைக்குப் பின் நீதிபதி முக்தா குப்தா கூறுகையில், ‘‘விசாரணை நீதிமன்றம் விடுத்த சம்மன் மீதான தடை வரும் ஜூலை 17ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, போலீஸ்காரரின் மனுவுக்கு கெஜ்ரிவால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்’, என உத்தரவிட்டார்.

மூலக்கதை