ராம்ஜாஸ் கல்லூரி கருத்தரங்கில் பேச ஜேஎன்யு உமர் காலித், ரஷீத்தை அழைத்த விவகாரத்தில் மோதல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: டெல்லி பல்கலையின் கீழ் இயங்கும் ராம்ஜாஸ் கல்லூரியில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 20க்கும் அதிகமான மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. டெல்லி பல்கலையின் ராம்ஜாஸ் கல்லூரியில் “எதிர்ப்பு கலாசாரம்” என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் சிறப்பு விருந்தினராக ஜேஎன்யு பல்கலை மாணவர்கள் உமர் காலித் மற்றும் ஷெகலா ரஷீத் ஆகிய இருவருக்கும் கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்தது.  இவர்களில் உமர் காலித், கடந்த ஆண்டு பிப்ரவரியில்  நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவிற்கு ஜேஎன்யுவில் நினைவஞ்சலி கூட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர். மற்றொருவரான ரஷீத், மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடந்த போராட்டத்தை முன்னெடுத்தவர். இவர்களில் உமர் காலித், ஆதிவாசிகள் பகுதியில் நடைபெறும் சண்டை குறித்து பேச இருந்தார். இது பி.எச்டி மாணவர்களுக்கு பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று காலித்தை தொடர்ந்து அடுத்த நாள் (நேற்று)ரஷீத் பேசவிருந்தார். இந்நிலையில், இந்த இருவரையும் கருத்தரங்கு கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டதற்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பாஜ கட்சியின் மாணவர் அமைப்பான ஏபிவிபி பிரிவு மாணவர்கள் மற்றும் டெல்லி பல்கலை மாணவர்கள் சங்கம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், ஜேஎன்யுவின் இரண்டு மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரினர்.  இதையடுத்து இருவருக்குமான அழைப்பை கல்லூரி நிர்வாகம் ரத்து செய்தது. இருப்பினும் கருத்தரங்கு தொடர்ந்து நடைபெறும் எனவும் நிர்வாகம் அறிவித்தது. இது குறித்து பேசிய நிகழ்ச்சிய ஏற்பாட்டாளர்கள், “ஏபிவிபி மாணவர்கள் கருத்தரங்கு நடைபெறும் அறையின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதோடு, மின் இணைப்பை துண்டித்தனர். பேச்சுரிமைய  தடை செய்யும் நோக்கம் கல்லூரி நிர்வாகத்திற்கு கிடையாது. இந்த விவகாரத்தில் கல்லூரியின் அமைதி கெட்டுவிடக்கூடாது என்பதாலேயே இருவருக்குமான அழைப்பு ரத்து செய்யப்பட்டது” என நேற்று முன்தினம் விளக்கம் அளித்தனர். இந்நிலையில் தான், உமர் காலித் மற்றும் ரஷீத்திற்கான அழைப்பை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவு மாணவர்கள் நேற்று கல்லூரியின் வளாகம் முன்பாக கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அபபோது கோபமடைந்த கல்லூரி  மாணவர்கள் நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் போரட்டத்தை  கலைக்க முயன்ற போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது. இதில்  20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

மூலக்கதை