நடிகை பாவனா கடத்தல் சம்பவம்: நடிகரிடம் போலீசார் விசாரணை: இயக்குனர் வீட்டில் பதுங்கிய ஒருவர் கைது

தினகரன்  தினகரன்

திருவனந்தபுரம்: நடிகை பாவனாவை கடத்தி, பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக பிரபல நடிகரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நடிகை பாவனாவை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது. இந்த வழக்கில் பாவனாவின் டிரைவர் மார்ட்டின், பிரபல ரவுடி மணிகண்டன், சலீம், பிரதீப் என 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முன்னாள் டிரைவர் சுனில்குமார், அவரது நண்பர் பிஜீஸ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். பாவனா கடத்தப்பட்டதில் தொடர்புடையதாக கூறப்பட்ட நடிகரிடம் சுமார் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ‘‘தனக்கும் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தொழில் ரீதியில் என்மீதுள்ள விரோதம் காரணமாக சிலர் என்னை பழிவாங்க பொய் கூறுகின்றனர்’’ என்று அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.கொச்சி காக்கநாட்டில் உள்ள  பிரபல மலையாள இயக்குநரும், நடிகருமான ஒருவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி பாவனா கடத்தல் தொடர்புடைய நபரை கைது செய்தனர். இந்நிலையில், பாஜ மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், ‘‘கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் பீனீஷூக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார். கேரள முதல்வர் பினராய் விஜயன் அளித்துள்ள பேட்டியில், ‘‘பாவனா கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். இதற்கான தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்’’ என்று கூறினார்.

மூலக்கதை