பழி தீர்க்க முயலும் ‘கங்காரு’ இந்தியா-ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் நாளை தொடக்கம் - புனேவில் நடைபெறுகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பழி தீர்க்க முயலும் ‘கங்காரு’ இந்தியாஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்  புனேவில் நடைபெறுகிறது

புனே: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் புனேவில் நாளை தொடங்குகிறது.

இந்திய அணி கடைசியாக விளையாடிய 19 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே காணாமல் உள்ளது. இந்த வெற்றி பயணத்தை ஆஸ்திரேலியா தடுத்து நிறுத்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் இந்திய துணை கண்டத்தில் தொடர்ந்து தடுமாறி வரும் ஆஸ்திரேலியாவால் இதை செய்ய முடியுமா? என்பது
கேள்விக்குறிதான். ஏனெனில் சமீப காலத்தில் இந்தியா அளவுக்கு வேறு எந்த அணியும் சிறப்பாக செயல்படவில்லை.

இலங்கை, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் என வலுவான அணிகளை இந்தியா வரிசையாக வீழ்த்தி வருகிறது.

கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரை சொந்த மண்ணில் 50 டெஸ்ட்டுகளில் விளையாடியுள்ள இந்தியா அவற்றில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தோல்விதான் சொந்த மண்ணில் இந்தியா கடைசியாக சந்தித்த தோல்வி. கேப்டன் விராட் கோஹ்லி, புஜாரா, முரளி விஜய் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் உள்ளனர்.

இந்திய மைதானங்கள் சுழலுக்கு சாதகமானவை என்பதால், 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் 4 ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்திய சுழல் கூட்டணியான அஸ்வின்-ஜடேஜா அளவுக்கு அவர்கள் சிறப்பாக செயல்பட முடியுமா? என்பதும் சந்தேகமே.



கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரையே ஆஸ்திரேலியா பெரிதும் சார்ந்துள்ளது. அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் போதிய அனுபவம் அற்றவர்கள்.

கடைசியாக கடந்த 2013ம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் 4-0 என ஒயிட்வாஷ் ஆனது. அதற்கு பதிலடி கொடுக்க தற்போதைய ஆஸ்திரேலிய அணி முயலும்.

எனவே விறுவிறுப்பான டெஸ்ட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்
கிறது. இந்த போட்டி நாளை காலை 9. 30 மணிக்கு தொடங்குகிறது.



புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் இந்தியாவில் டெஸ்ட் போட்டி நடைபெறும் 25வது மைதானம் என்ற பெருமையை இம்மைதானம் பெறுகிறது.


  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெறும் 91வது டெஸ்ட் போட்டி இது. இதில், இந்தியாவில் நடைபெறும் 47வது டெஸ்ட் போட்டியாக இது அமைகிறது.

இதுவரை இந்தியாவில் நடந்துள்ள இரு அணிகளுக்கு இடையேயான 46 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 19ல் வெற்றியும், 12ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா 24 போட்டிகளில் வெற்றியையும், 40ல் தோல்வியையும் சந்தித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 25 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுவே எந்த ஒரு அணிக்கு எதிராகவும் இந்தியா பெற்ற அதிக வெற்றிகளாகும்.

அந்த சாதனையை சமன் செய்ய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா இன்னும் ஒரு போட்டியில் வென்றால் போதுமானது.
  சூப்பர் பார்மில் உள்ள கோஹ்லி 2016-17 சீசனில் இதுவரை 1,206 ரன் குவித்துள்ளார்.

அவர் இன்னும் 64 ரன் எடுத்தால் ஒரு சீசனில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். கவுதம் கம்பீர் 2008-09 சீசனில் 1,269, ராகுல் டிராவிட் 2003-04 சீசனில் 1,241 ரன் எடுத்துள்ளனர்.


  அஸ்வின் இன்னும் 13 விக்கெட்டுகள் கைப்பற்றினால், கும்ப்ளே (350), ஹர்பஜன் சிங் (265), கபில்தேவ் (219) ஆகியோருக்கு பிறகு சொந்த மண்ணில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றும் 4வது இந்தியர் என்ற சாதனையை படைப்பார்.



தொடர் அட்டவணை

போட்டி                     தேதி                              இடம்
முதல் டெஸ்ட்    பிப்ரவரி 23-27            புனே
2வது டெஸ்ட்       மார்ச் 4-8                      பெங்களூரு
3வது டெஸ்ட்       மார்ச் 16-20                  ராஞ்சி
4வது டெஸ்ட்       மார்ச் 25-29                  தர்மசாலா

.

மூலக்கதை