பாடசாலைகளுக்கும் ஜீ.எம்.பி தரச் சான்றிதழ்?

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
பாடசாலைகளுக்கும் ஜீ.எம்.பி தரச் சான்றிதழ்?

அடுத்த வருடத்தில் இருந்து, பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளிலும்,
ஜீ.எம்.பி தரச் சான்றிதழ் வைத்திருக்கும் வகையிலான நடவடிக்கைளை கொண்டுவரவுள்ளதாக, இலங்கை நியமங்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து, அந்நிறுவனம் மேலும் கருத்து வௌியிடுகையில், 

“நாட்டில் உள்ள பல பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள், சுத்தமாக இல்லாததுடன் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. அநேகமான பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் தரம் அற்றவையாகக் காணப்படுகின்றன. 

தற்போது, உணவுப் பொருட்கள் மற்றும் குடிபானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், ஜி.எம்.பி தரச்சான்றிதழ் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளிலும், இந்தத் தரச் சான்றிதழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தரம்வாய்ந்த தயாரிப்புகளை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஜி.எம்.பி சான்றிதழ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.ஆனால், இந்தச் சான்றிதழை எந்தப் பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் வைத்திருக்கவில்லை. 

அந்த வகையில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள சிற்றுண்டிச்சாலைகளுக்கு, ஜீ.எம்.பி தரச் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும்.  

இந்த நடைமுறை கொண்டுவரப்படும்போது, இந்தத் தரச்சான்றிதழ் இன்றி பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள், உணவு விற்பனை நடவடிக்கையில் ஈடுபட முடியாது என, தெரிவித்துள்ளது.  

இதே​வேளை, நாட்டில் பல சமையல்காரர்கள், உணவுத் தயாரிப்பு நிலையங்கள் என்பன இன்னும் ஜீ.எம்.பி தரச் சான்றிதழ் பெறாமல் உள்ளதாகவும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை