சசிகலாவுக்கு ஆதரவா? மக்கள் ஆவேசம்: அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சருக்கு கருப்புகொடி - நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சசிகலாவுக்கு ஆதரவா? மக்கள் ஆவேசம்: அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சருக்கு கருப்புகொடி  நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு

நாட்றம்பள்ளி- நாட்றம்பள்ளி அருகே மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு இன்று காலை வந்த அமைச்சருக்கு, தீபா பேரவையினர் கருப்பு கொடி காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணத்திற்கு பின், அதிமுக 2 ஆக உடைந்துள்ளது.

சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் கட்சி பிரிந்து செயல்படுகிறது. இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தனர்.

அவர் முதல்வராக பொறுப்பேற்றதும் கடந்த 18ம் தேதி  சட்டப்பேரவையில் அவரது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் நேரடியாக சபைக்கு வரவழைக்கப்பட்டனர்.

அன்று சட்டசபையில் பல்வேறு குழப்பங்கள், கலவரங்களுக்கு இடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
ஆனால், தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ஒவ்வொருவராக தொகுதிக்கு திரும்பி வருகின்றனர். பல இடங்களில் எம்எல்ஏக்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவர்களது வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் அமைச்சர் கே. சி. வீரமணி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் பள்ளி அருகே அதிமுக கொடிகளை கட்டியிருந்தனர்.

அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதிமுகவினர், தீபா பேரவையினர் மற்றும் பொது மக்கள் அங்கு வந்து அதிமுக கொடி கம்பங்களை அகற்றினர். இதையறிந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் பள்ளி அருகே திரண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே. சி. வீரமணிக்கு, புதுப்பேட்டை எம்ஜிஆர் சிலை அருகே பொதுமக்கள் மற்றும் தீபா பேரவையினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் காரில் இருந்து இறங்கி, கருப்பு கொடி காட்டியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்த சென்றார்.

அப்போது அவர்கள், ‘‘சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏன் ஆதரவு தெரிவித்தீர்கள்? தேர்தலில் ஜெயலலிதாவிற்குதானே நாங்கள் வாக்களித்தோம். வாக்களித்த மக்களை கேட்காமல், நீங்கள் எப்படி சசிகலாவிற்கும், டி. டி. வி.

தினகரனுக்கும் ஆதரவு தெரிவிக்கலாம்?’’ என ஆவேசமாக குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதன்பின்னர்,  அரசு பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை