சட்டசபையில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மீது எப்போது நடவடிக்கை? பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சட்டசபையில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மீது எப்போது நடவடிக்கை? பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

சென்னை- சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்றத்தில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற பிரச்னைக்கு திமுகதான் முழு காரணம்.

அவர்கள் 2 கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். ஒன்று, ரகசிய வாக்கெடுப்பு.

மற்றொன்று, சபையை ஒத்திவைத்து மற்றொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைத்தனர். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது.

இது கட்சி தாவல் தடுப்பு சட்டத்துக்கு முரணானது. திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தது சரியான நடவடிக்கை.

சட்டசபையில் சபாநாயகர் எடுப்பதுதான் இறுதி முடிவு. இப்போது சட்டமன்றத்தில் நடைபெற்ற பிரச்னை பற்றி கவர்னர், குடியரசு தலைவரிடம் சென்று முறையிடுகின்றனர்.

சபாநாயகர் முடிவில் மத்திய அரசோ, கவர்னரோ, குடியரசு தலைவரோ தலையிட முடியாது. திமுகவின் ஒரே குறிக்கோள், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்.

புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான்.

ஜனநாயகத்தில் உண்ணாவிரதம் இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு மாணவர்கள், இளைஞர்கள் கொடுத்த ஆதரவு இதற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பது தவறு. ஒரு வாரம் கழித்து வாக்கெடுப்பு நடத்தினால் பிரச்னை வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அனைத்து எம்எல்ஏக்களையும் ஓரிடத்தில் வைத்திருந்ததால்தான் சட்டசபைக்கு ஒழுங்காக கொண்டு வர முடிந்தது.

சட்டசபைக்கு வெளியில் நடப்பது பற்றி சபாநாயகர் கவலைப்பட வேண்டியதில்லை. போலீஸ் உயர் அதிகாரிகளை கொண்டு சட்டசபையில் இருந்து உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகருக்கு உரிமை உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் 11 பேர் (ஓபிஎஸ் அணி) மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.


.

மூலக்கதை