6 மாதங்களுக்கு பின்புதான் சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் - கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
6 மாதங்களுக்கு பின்புதான் சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும்  கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா பேட்டி

சென்னை- பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு 6 மாதங்களுக்கு பின்புதான் பரோல் கிடைக்கும் என்று வக்கீல் ஆச்சார்யா கூறினார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் வாதாடிய கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்காக மகிழ்ச்சி அடையவில்லை.

இவ்வளவு நாட்களாக நான் உழைத்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்ற மனதிருப்தி ஏற்பட்டுள்ளது. தப்பு செய்கிறவர்கள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பயத்தை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்தால் என்றாவது ஒரு நாள் சட்டத்தின் பிடியில் சிக்கித்தான் ஆக வேண்டும் என்ற பாடத்தை புகட்டியுள்ளது.

ஜெயலலிதா உள்ளிட்டோர் ரூ. 66. 65 கோடிக்கு சொத்து சேர்த்தார்கள் என்பது வழக்கு. அது சிறப்பு நீதிமன்றத்தில் உறுதியானது.

ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பில், ‘‘வருமானத்துக்கு அதிகமாக இவர்கள் ரூ. 2. 82 கோடி மட்டுமே சொத்து சேர்த்தார்கள்’’ என்று சொல்லி விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி, மொத்த வருமானத்தை கணக்கிடும் போது பிழை செய்திருக்கிறார்.

அந்த கணக்கை சரி செய்தாலே ரூ. 21கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வருகிறது. இதுவே தண்டனையை உறுதி செய்யும்.

குற்றவாளிகளுக்கு சொந்தமான கட்டடங்களை வல்லுநர்களை கொண்டு ஆய்வு செய்து மதிப்பு ரூ. 27 கோடி என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை மதிப்பீடு செய்துள்ளது. ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதி அவராகவே அந்த மதிப்பை ரூ. 5 கோடி என்று மதிப்பீடு செய்து கொண்டார்.

இது தவறு.

மேலும் குற்றவாளிகள் நான்கு பேரும் ஒரே வீட்டில் இருந்தனர். 4 பேரின் வங்கி கணக்குகளில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

அவர்கள் கூட்டுசதி செய்து சொத்துக்களை குவித்துள்ளனர் என்று வாதிட்டோம். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கணிதப்பிழையை மட்டும் அகற்றி விட்டால் 3 நீதிமன்ற தீர்ப்புகளும் ஒன்றாகவே இருந்திருக்கும்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். இப்போது குற்றவாளிகள் தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.

ஆனால், அதற்கும் எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை. தண்டனை வழங்கப்பட்டு விட்டதால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

பரோலில் மட்டுமே வெளியே வர முடியும். அதுவும் 6 மாதங்கள் சிறையில் இருந்த பின்புதான் பரோல் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை