என் பெயரில் கவிதை எழுதுவதா? மன்னிப்பு கேட்க வேண்டும் கமல்ஹாசன் சொல்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
என் பெயரில் கவிதை எழுதுவதா? மன்னிப்பு கேட்க வேண்டும் கமல்ஹாசன் சொல்கிறார்

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து கமல்ஹாசன் தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். மறைமுகமாக அந்த கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராகவும்.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் அமைந்துள்ளன. மேலும் எம்எல்ஏக்கள் பற்றி குறிப்பிடும்போது, ‘அவர்கள் ஊர் திரும்புகிறார்கள் தகுந்த வரவேற்பை தரவேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து அதிமுகவினர் (சசி அணி) போலீசில் புகார் செய்துள்ளனர். இந்நிலையில் ‘சிங்கமில்லாக் காடு’ ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை’ என்ற பெயரில் கமல்ஹாசன் எழுதியதாக வாட்ஸ் அப்பில் கவிதை பரவி வருகிறது.

அதில்,
செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது
உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!
வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!
ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!
அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!
நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது. . .
என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.

ஆனால் கமல்ஹாசனோ மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘வாட்ஸ் அப்பில் நீள் கவிதை என் பெயரில் உலா வருகிறது.

தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன். அந்த தப்பு எனதல்ல.

செய்தவர் துணிந்து மன்னிப்பு கேட்கவும்’ என குறிப்பிட்டுள்ளார்.


.

மூலக்கதை