இலங்கை பெண்களின் மேம்பாட்டுக்கு தேசிய மகளிர் ஆணைக்குழு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
இலங்கை பெண்களின் மேம்பாட்டுக்கு தேசிய மகளிர் ஆணைக்குழு

இலங்கை பெண்களின் மேம்பாட்டுக்கு, தேசிய மகளிர் ஆணைக்குழுவை நிறுவுதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தின் போ​து,​ மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கே  இந்த அங்கிகாரம் கிடைத்துள்ளது.

வாரந்த அமைச்சரவை முடிவுகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

“இலங்கை பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக மற்றும் அவர்களை மேம்படுத்துவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, இலங்கை பெண்கள் பணியகம் மற்றும் தேசிய பெண்கள் குழு ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் செயலாற்றியது.

எனினும், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் போது, தலையிட்டு விசாரணைகளை முன்னெடுத்து மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இவ்விரு நிறுவனங்களுக்கும் எவ்விதமான அதிகாரங்களும் இல்லை.

ஆகையினால், பெண்களின் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பதற்காக அரசியலமைப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான சகல வகையான வன்முறைகளையும் துடைத்தெறிவதற்கான பிரகடனத்தின் பிரகாரம் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டு அதிகாரத்தின் கீழே, தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை