இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆஸி அணிக்கு தக்க பதிலடி தருவோம்: கும்ப்ளே சூளுரை

தினகரன்  தினகரன்

புனே: ஆஸ்திரேலிய வீரர்களின் அசாத்திய திறமைக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி தருவர் என்று பயிற்சியாளர் அணில் கும்ப்ளே கூறியுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் நாளை தொடங்குகிறது. 4 போட்டிகளை கொண்ட தொடரில் முன்னிலை பெற 2 அணிகளுமே ஆயத்தமாகியுள்ளன. அதற்காக 2 அணிகளும் முன்னதாகவே வந்து, உள்ளூர் பருவநிலைக்கு ஏற்ப தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். இந்திய வீரர்கள் பயிற்சியாளர் கும்ப்ளே மேற்பார்வையில் 2-வது நாளாக நேற்று பயிற்சி எடுத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கும்ப்ளே ஆஸ்திரேலிய வீரர்களின் களத்திறமை நன்றாக தெரியும் என்றும் அதற்கேற்ப இந்திய வீரர்கள் பதிலடி தருவர் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோன்று, ஆஸ்திரேலியா அணியினரும் புனே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வணி பந்து வீச்சாளர் நாதன் லியான், உள்ளூரில் இந்தியாவின் ஆதிக்கத்தை முறியடிக்க போராடுவோம் என்றார். இதற்கு முன்னர், இந்தியா வந்தபோது 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்து, வெரும் கையுடன் தாயகம் திரும்பியது ஆஸ்திரேலியா. அதற்கு பதிலடி தர அந்த அணி கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது. இந்திய வீரர்கள் அதற்கு இடமளிப்பார்களா என்பது போகப்போகத்தான் தெரியவரும். 

மூலக்கதை