3 மாதங்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவு

தினகரன்  தினகரன்

டெல்லி: நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் அனைத்து தொழிற்சாலைகளும் தங்களது வளாகத்திற்குள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை செய்யத் தவறினால் தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும் தொழிற்சாலைகள் இணைந்து பொது சுத்திகரிப்பு மையம் அமைக்க, 3 ஆண்டுகள் கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் மேற்கண்ட உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதற்காக மாநில அரசின் உதவியோடு நிலத்தை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவுகளை சுத்திகரிக்க தொழிற்சாலைகளுக்கு விதிமுறைகளை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பு கோரியுள்ளது.

மூலக்கதை