எச்1பி விசாவுக்கு கட்டுப்பாடு டிரம்ப் அரசு பொறுமையாக செயல்பட வேண்டும் - அமெரிக்க எம்பிக்களிடம் மோடி வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எச்1பி விசாவுக்கு கட்டுப்பாடு டிரம்ப் அரசு பொறுமையாக செயல்பட வேண்டும்  அமெரிக்க எம்பிக்களிடம் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி- எச்1பி விசா அளிக்க புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் விவகாரத்தில் அமெரிக்க அரசு பொறுமையுடன் தொலைநோக்கு பார்வையில் செயல்பட வேண்டும் என அந்நாட்டு எம்பிக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

ஈரான், ஈராக், சிரியா, சோமாலியா உள்ளிட்ட 7 வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்க நீதிமன்றமும் முட்டுக்கட்டை போட்டது. இதற்கிடையே, அமெரிக்காவுக்கு வேலைக்காக வருவோருக்கு  வழங்கப்படும் எச்1பி விசா அளிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகளை டிரம்ப் அரசு கொண்டு வருகிறது.

இதற்கான வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் பணியாற்றும் ஏராளமான இந்தியர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகும்.

அதே சமயம், இந்தியாவுடன் நட்புறவை பேணி காக்க டிரம்ப் அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற எம். பி. க்கள் 26 பேர் இந்தியா வந்துள்ளனர்.

அவர்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் மோடி ஆலோசித்தார்.

அமெரிக்க புதிய அதிபர் டிரம்புடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்தும் பிரதமர் விளக்கினார்.

மேலும், அமெரிக்காவில் எச்1பி விசா நடைமுறைகள் மற்றும் திறமைவாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் டிரம்ப் அரசு பொறுமையாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

.

மூலக்கதை