கருப்பு கொடி போராட்டத்தால் விழாவை தவிர்த்த அதிமுக எம்எல்ஏ

தமிழ் முரசு  தமிழ் முரசு
கருப்பு கொடி போராட்டத்தால் விழாவை தவிர்த்த அதிமுக எம்எல்ஏ

குடியாத்தம்- வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெறும் என்றும், இதில் கே. வி. குப்பம் தொகுதி எம்எல்ஏ லோகநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குவார் என அழைப்பிதழ் விநியோகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர்கள் கழகம் மற்றும் கல்வி குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இலவச சைக்கிள் வாங்க மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்ததை கண்டித்து பள்ளியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள வரும் எம்எல்ஏ லோகநாதனுக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என்றும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கிராமம் முழுவதும் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த எம்எல்ஏ இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தாராம்.

இதனால் இலவச சைக்கிள் வழங்கும் விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.

மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

.

மூலக்கதை