அதிமுக அரசுக்கு திராணி இருந்தால் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த தயாரா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுக அரசுக்கு திராணி இருந்தால் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த தயாரா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

காஞ்சிபுரம்- ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த அதிமுக அரசுக்கு தெம்பு இருக்கிறதா என்று காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடிக்கு திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் சவால் விடுத்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அதிமுக, தேமுதிக மற்றும் பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 13,514 பேர் திமுகவில் இணையும் விழா மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் தலைமை தாங்கினார். மதுராந்தகம் நகர செயலாளர் குமார் வரவேற்றார்.

எம்எல்ஏக்கள் புகழேந்தி, ஆர். டி. அரசு, வக்கீல் எழிலரசன், மாவட்ட அவைத் தலைவர் பொன்மொழி, பொருளாளர் சுகுமார் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் தமிழர்களின் நலன் காக்கின்ற கட்சியாக திமுக உள்ளது.



ஆனால் அதிமுக தற்போது ஆட்சியில் உள்ள கட்சியாக இருக்கிறது. ஆனால் திமுகவில் இணைந்திருக்கிறார்கள்.

இதற்கு காரணம் தமிழக மக்களை நல்வழிப்படுத்துகிற கட்சியாக திமுக இருக்கிறது என்பதுதான். தற்போது தமிழக ஆட்சியை வழிநடத்துபவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டார். அவர் ஒரு குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியிருக்கிறது.

தற்போது ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா சிறையில் இருக்கிறார். இப்போது ஒரு பினாமி ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

எப்படிப்பட்ட ஆட்சி என்று நான் கூறவில்லை. சமூக வலைதளங்களில் சசிகலாவின் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அல்ல.

எடுபிடி ஆட்சி என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். அப்போது ஜெயலலிதா குற்றவாளி, ஓபிஎஸ் ஆட்சி.

இப்போது சசிகலா குற்றவாளி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி. இதைவிட தமிழகத்தில் வெட்கம், வேதனை, அக்கிரமம் எதுவும் இருக்க முடியாது.

கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில் என்ன நடந்ததென்று எல்லோருக்கும் தெரியும்.

1. 1. சதவிகித வாக்கு
வித்தியாசத்தில்தான் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.

89 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று பெரும்பான்மை எதிர்க்கட்சியாக திமுக செயல்படுகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள்.

கருணாநிதி தலைமையிலான ஆட்சியில்தான் 1971ல் 187 சட்டமன்ற உறுப்பினர்களை பெரும்பான்மையாக பெற்ற பெருமையும் திமுகவிற்கும் உண்டு. பிரதான எதிர்கட்சியாக செயல்படுவதிலும் திமுகவிற்கே பெருமை உண்டு.

இதுவரை தேர்தலில் நின்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர் கருணாநிதி. அவருக்கென்று தனி வரலாறு உண்டு.

நாங்கள் தோல்விகளைக் கண்டு துவண்டு விடவில்லை. அன்றே, தோல்வியை கண்டு துவண்டுவிடாதே, வெற்றியை கண்டு இறுமாப்பு கொள்ளாதே என்று அண்ணா கூறினார்.

எந்த நிலையில் இருந்தாலும் மக்களை பற்றி கவலைப்படும் கட்சியாக திமுக இருந்திருக்கிறது.

அதிமுகவில் நடந்த ஊழல்களை மக்களுக்கு எடுத்து சொல்லி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தார்.

நாடு குட்டிச்சுவராகி விட்டது. அதற்கு பிறகு வெற்றி பெற்றாலும் அவர் சட்டமன்றத்திற்கு வராமல் இருந்தார்.

அதிமுக ஆட்சியல்ல, காணொலி காட்சி என்று கருணாநிதி கூறியது போல் ஆட்சி நடந்து வந்தது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருக்கும்போது சமூக நல்வாழ்வு துறை அமைச்சரும் தலைமை செயலாளரும் என்ன நடக்கிறது என்று மக்களிடம் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் யாரும் ஏதும் சொல்லவில்லை. அப்போது டீ சாப்பிட்டார், கையெழுத்து போட்டார் என்று கூறினார்கள்.

ஆனால் அப்போது வாய் திறக்காத ஓபிஎஸ், தனக்கு முதல்வர் பதவி கிடைக்காது என்று தெரிந்த பிறகு, ஜெயலலிதா சமாதியை தேடி சென்று தியானம் செய்து, ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது’ என்று கூறுகிறார். அப்போது கூற அவருக்கு தெம்பு இல்லையா? திராணி இல்லையா?

இப்போது நடக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி, 5 திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது.

அது ஏற்கெனவே ஜெயலலிதா அறிவித்த திட்டம்தான். அதிமுக ஆட்சிக்கு தெம்பு இருந்தால், ஜெயலலிதா சாவில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்க முடியுமா? அவ்வாறு நீதி விசாரணை வைத்தால், 4 ஆண்டுகள் அல்ல, ஆயுள் முழுவதும் கைதியாகத்தான் இருக்க வேண்டும்.

ஆகவே இந்த மாஃபியா கும்பல் ஆட்சியை அகற்ற நாம் ஒன்று சேர வேண்டும். ஒருவனுக்கு சூடு சொரணை எதுவுமே இல்லையென்றால் அது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும்தான்.

இந்த அராஜக பினாமி ஆட்சியை அகற்ற ஒட்டு மொத்த மக்களும் தயாராக இருக்கிறார்கள். இந்த ஆட்சி ஒழியாதா, 10 பேரை இழுக்க முடியாதா என்று வாட்ஸ் அப்பில் தகவல் போடுகிறார்கள்.

ஆனால் கொல்லைபுறமாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணமோ குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டிய எண்ணமோ திமுகவிற்கு இல்லை. இளைஞர்கள், பொதுமக்கள் சேர்ந்து மெரினா புரட்சி ஏற்பட்டது போல இந்த ஆட்சியை தூக்கியெறிய நாம் அனைவரும் தயாராவோம்.

அனைவரும் ஒன்றிணைந்து பினாமி ஆட்சியை அகற்றுவோம். இவ்வாறு மு. க. ஸ்டாலின் பேசினார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக் நன்றி கூறினார்.

ஸ்டாலினுக்கு வீரவாள்
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஏவி. சுரேஷ்குமார், சுகந்தி தம்பதியின் குழந்தைக்கு மரகதம் என்று மு. க. ஸ்டாலின் பெயர் சூட்டினார். மறைந்த வாலாஜாபாத் முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் குடும்பத்துக்கு மு. க. ஸ்டாலின் ரூ. 2 லட்சம் நிதி வழங்கினார்.

விழாவில் மு. க. ஸ்டாலினுக்கு வீரவாள், செங்கோலை மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ வழங்கி கவுரவித்தார்.
 
தங்க மோதிரம் பரிசு
சிறப்பாக செயல்பட்ட நகர செயலாளர்கள் காஞ்சிபுரம் சன். பிராண்ட் ஆறுமுகம், மதுராந்தகம் குமார், ஒன்றிய செயலாளர்கள் பி. எம். குமார், சிறுவேடல் செல்வம், குமணன், சத்தியசாய், கண்ணன், தம்பு, ராமச்சந்திரன், ஞானசேகரன், சேகர், சாலவாக்கம் குமார், சரவணன், ஏழுமலை, பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், உசேன், இனியரசு ஆகியோருக்கு மு. க. ஸ்டாலின் தங்க மோதிரம் அணிவித்து கவுரவித்தார்.

.

மூலக்கதை