நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி சென்னையில் 4 இடங்களில் திமுக உண்ணாவிரதம் பொதுமக்கள், இளைஞர்கள் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி சென்னையில் 4 இடங்களில் திமுக உண்ணாவிரதம் பொதுமக்கள், இளைஞர்கள் பங்கேற்பு

சென்னை- சட்டப்பேரவையில் கடந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரியும், திமுக எம்எல்ஏக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களை திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில், வள்ளுவர்கோட்டம் அருகே மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

இதில் டி. ஆர். பாலு, காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொருளாளர் நாசே. ராமச்சந்திரன், பீட்டர் அல்போன்ஸ், எச். வசந்தகுமார், கோபண்ணா, எம்எல்ஏ எம். கே. மோகன், துர்கா ஸ்டாலின், செல்வி செல்வம், மு. க. தமிழரசு, டாக்டர் என். எஸ். கனிமொழி, பூச்சிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தென் சென்னை தெற்கு மாவட்டம் சார்பில், ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் மாவட்டச் செயலாளர் மா. சுப்பிரமணியன் எம்எல்ஏ சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ், ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத், பகுதி செயலாளர்கள் என். சந்திரன், பி. குணாளன், துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். இந்த உண்ணாவிரதத்தில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

குணசித்திர நடிகரும் பிரபல பின்னணி பாடகருமான மாணிக்கவிநாயகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர். தனபாலன், மாநில வர்த்தக அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம், புலவர் இந்திரகுமாரி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் க. தனசேகரன், மகேஷ்குமார், கீதா ஆனந்த், மாவட்ட தொண்டரணி கிரிஜா பெருமாள் மற்றும் நிர்வாகிகள் மனோகரன், விஸ்வநாதன், குணசேகரன், எம்எஸ்கே. இப்ராகிம், முத்து, கே. ஆர். ஜெகதீஸ்வரன், முரளிகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏஎம்வி. பிரபாகர்ராஜா, துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் மற்றும் காங்கிரசை சேர்ந்த ஷீலா கோபாலகிருஷ்ணன், குமார், ஆதம் பிரகாஷ், ரவிக்குமார், நேரு ரோஜா, கோவிந்தராஜ் உட்பட எக்ஸ்னோராவின் இணை பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் மாற்று திறனாளிகள், மாணவ-மாணவிகள் உட்பட ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழக சட்டமன்றத்தில் கடந்த 18-ம் தேதியன்று நடைபெற்ற ஜனநாயக படுகொலையை தொலைக்காட்சிகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பாக உண்ணாவிரத அறப்போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தில் அனைத்து பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று உள்ளனர். அறப்போராட்டத்தின் மூலம் சசிகலாவின் பினாமி அரசை விரட்டியடித்து விட்டோம் என்ற செய்தி விரைவில் வெளிவரும்.

இவ்வாறு மா. சுப்பிரமணியன் பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தங்கசாலை அரசு அச்சகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

மாவட்டச் செயலாளர் பிகே. சேகர்பாபு எம்எல்ஏ தலைமை தாங்கினார். திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன், டி. கே. எஸ். இளங்கோவன் எம்பி, எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, தொமுச பொதுச் செயலாளர்  ரத்தினசபாபதி, மஸ்தான், அசன் முகமது ஜின்னா, தமிழ்வேந்தன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் எண்ணூர் நெடுஞ்சாலையில் மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

எம்எல்ஏ கேபிபி. சாமி, ஆர். டி. சேகர், காங்கிரசை சேர்ந்த ஹயத்கான், எம். எஸ். திரவியம், வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த நல்லதம்பி, மாணவர் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வழக்கமாக கட்சி சார்பில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் அதிகமாக கலந்து கொள்வார்கள்.

ஆனால் இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை