சட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து திமுக இன்று உண்ணாவிரதம்: திருச்சியில் ஸ்டாலின் பங்கேற்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து திமுக இன்று உண்ணாவிரதம்: திருச்சியில் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை ஏற்கிறார்.

சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டார். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இதையடுத்து கிழிந்த சட்டையுடன் ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார்.

இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில், சட்டசபை சம்பவம் தொடர்பாகவும் ஜனாதிபதியை சந்தித்து புகார் கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தின் முடிவில் சட்டசபையில் திமுகவினர் மீதான தாக்குதலைக் கண்டித்து 22ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து முடிந்தன. இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் உண்ணாநிலைப் போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். காஞ்சிபுரத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமை ஏற்கிறார். அதே போல அந்தந்த மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உண்ணாவிரதத்தை தலைமை ஏற்று நடத்துகிறார்கள்.

திமுக நடத்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள், இயக்கங்கள், இதர கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.

 

 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும். யாரும் உண்ணாவிரத பந்தலை விட்டு எழுந்து போகக் கூடாது. தொண்டர்கள் டீ கடை பக்கம் கூட ஒதுங்க கூடாது. யாராவது அப்படி சென்றால் மீடியாக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று திமுகவினருக்கு கட்டுத்திட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதால் காவல்துறை நமக்கு போதிய பாதுகாப்பு வழங்காது. அதனால் கட்சியில் உள்ள தொண்டரணியினர் பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும் என்றும் திமுக தலைமைகள் அந்தந்த மாவட்டங்களில் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை