தவறிழைத்த படையினரே நீதிமன்றம் செல்ல நேரிடும் – சந்திரிகா

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
தவறிழைத்த படையினரே நீதிமன்றம் செல்ல நேரிடும் – சந்திரிகா

காணாமற்போனோர் தொடர்பான பணியகம், அமைக்கப்படுவது சிறிலங்கா படையினரை அனைவரையும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், தற்போது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“காணாமற்போனோருக்கான பணியகம், தொடர்பாக சில இராணுவ அதிகாரிகள் தவறான கருத்தை பரப்புகிறார்கள்.

இந்தச் செயலகம் அனைத்து இராணுவத்தினரையும் அனைத்துலக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப் போவதாக எதிர்மறையான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இவர்கள் கூறுவது தவறானது.

தவறு செய்த இராணுவத்தினரை மாத்திரமே, இந்தச் செயலகம் நீதிமன்றத்தில் நிறுத்தும்.

போரின் இறுதிக்கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே காணாமற்போனோருக்கான செயலகம் அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இந்தச் செயலகம் செயற்படத் தொடங்கும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் இன்னமும் இந்தச் செயலகம் யாருடைய தலைமையில் இயங்கும் என்று“அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை