மேலும் 14 மருத்துவ கருவிகளின் விலை கட்டுப்படுத்தப்படுமா? சுகாதார அமைச்சகம் விளக்கம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ஸ்டென்ட்டை தொடர்ந்து, மேலும் 14 மருத்துவ கருவிகளின் விலையை கட்டுப்படுத்த தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. எலும்பு மூட்டு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேட், கண் லென்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களின் விலை பல மடங்கு அதிக லாபத்துக்கு விற்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து இவற்றை இறக்குமதி செய்வதற்கு குறைந்த செலவுதான் ஆகிறது. விலை மிக குறைவுதான். ஆனால் நோயாளிகளுக்கு விற்கப்படும்போது, பல மடங்கு லாபம் பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.  கடந்த 2015ம் ஆண்டில் இருந்து இவற்றின் விலை விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு கோரியுள்ளதாகவும்,  இவற்றை விலை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஸ்டென்ட் போல வேறு சில மருத்துவ கருவிகளின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு பரிந்துரையும் வரவில்லை. தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இவற்றை சேர்க்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் தற்போதைக்கு இல்லை’’ என்றார்.

மூலக்கதை