விஜய் ஹசாரே டிராபி : ஜார்க்கண்ட் அணிக்கு டோனி கேப்டன்: ரசிகர்கள் உற்சாகம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான ஜார்க்கண்ட் அணி கேப்டனாக எம்.எஸ்.டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவில் நடைபெறும் பிரபல உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடரான விஜய் ஹசாரா டிராபியில், மொத்தம் 24 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதவுள்ளன. இந்த தொடர் பிப். 25ம் தேதி தொடங்கி மார்ச் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. லீக் சுற்றின் முடிவில் கால் இறுதி ஆட்டங்கள் மார்ச் 13, 14 தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் மார்ச் 16ம் தேதியும் நடக்க உள்ளன.இறுதிப் போட்டி மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ளது. பி பிரிவில் தமிழகம், டெல்லி, இமாச்சல், மகாராஷ்டிரா, கேரளா, திரிபுரா அணிகள் இடம் பெற்றுள்ளன. ஜார்க்கண்ட் அணி டி பிரிவில் களமிறங்குகிறது. இந்த அணியின் கேப்டனாக டோனி நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் ஏற்கனவே விலகியுள்ள நிலையில், ஐபிஎல் டி20 தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி அதிரடியாக நீக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.இந்த நிலையில், விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான ஜார்க்கண்ட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டோனி தலைமையிலான அணியில் மொத்தம் 18 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். திறமையான இளம் வீரர்கள் இஷான் கிஷண், இஷாங்க் ஜக்கி, விராத் சிங், ஷாபாஸ் நதீம் ஆகியோர் அடங்கிய ஜார்க்கண்ட் அணி, டோனியின் அனுபவ வழிகாட்டுதலில் மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று அறிவிக்கப்பட்ட பஞ்சாப் அணியின் கேப்டனாக அனுபவ ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜார்க்கண்ட்: எம்.எஸ்.டோனி (கேப்டன்), இஷான் கிஷண், இஷாங்க் ஜக்கி, விராத் சிங், சவுரவ் திவாரி, கவுஷல் சிங், பிரதியுஷ் சிங், ஷாபாஸ் நதீம், சோனு குமார் சிங், வருண் ஆரோன், ராகுல் சுக்லா, அனுகுல் ராய், மோனு குமார் சிங், ஜஸ்கரன் சிங், ஆனந்த் சிங், குமார் தியோப்ரட், எஸ்.ரதோர், விகாஸ் சிங்.

மூலக்கதை