ஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதிச்சுற்று தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அசத்தல்: கடைசி பந்தில் த்ரில் வெற்றி

தினகரன்  தினகரன்

கொழும்பு: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்று பைனலில், தென் ஆப்ரிக்க அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் இலங்கையில் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. லீக் சுற்றின் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றில் பங்கேற்றன. இதில் இந்திய அணி 5 ஆட்டங்களிலும் அபாரமாக வென்று 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றது. தென் ஆப்ரிக்க அணி 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்தது. இலங்கை (6), பாகிஸ்தான் (4), வங்கதேசம் (2), அயர்லாந்து (0) அணிகள் அடுத்த இடங்களைப் பிடித்தன. பரபரப்பான பைனல்: இந்த நிலையில், கொழும்பு சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. கேப்டன் மித்தாலி ராஜ் காயம் காரணமாக விளையாட முடியாததால், அவருக்கு பதிலாக ஹர்மான்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது.அந்த அணி 49.4 ஓவரில் 244 ரன் குவித்து ஆல் அவுட்டானது. லீ 37, உல்வார்ட் 21, டு பிரீஸ் 40, த்ரிஷா 22, டிரையன் 23, கேப்டன் வான் நீகெர்க் 37, காப் 14, லூவஸ் 35 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ராஜேஸ்வரி கெயக்வாட் 3, ஷிகா பாண்டே 2, ஏக்தா பிஷ்ட், பூணம் யாதவ், தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கடின இலக்கு: இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 245 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா துரத்தலை தொடங்கியது. திருஷ்காமினி 10 ரன்னில் வெளியேற, மோனா மேஷ்ராம் - தீப்தி ஷர்மா ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 124 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். தீப்தி 71 ரன் (89 பந்து, 8 பவுண்டரி), மேஷ்ராம் 59 ரன் (82 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். வேதா கிருஷ்ணமூர்த்தி 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.ஒரு முனையில் கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் உறுதியுடன் போராட, ஷிகா பாண்டே 12 ரன் எடுத்து ரன் அவுட்டானார். அடுத்து வந்த தேவிகா வைத்யா, சுஷ்மா வர்மா இருவரும் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஏக்தா பிஷ்ட் 6 ரன், பூணம் யாதவ் 7 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.6 பந்தில் 9 ரன்: மார்சியா லெட்சோலோ வீசிய கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் பூணம் ரன் அவுட்டானார். கை வசம் ஒரு விக்கெட் மட்டுமே இருக்க அடுத்த 3 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் ஹர்மான்பிரீத் ஒரு ரன் கூட எடுக்காததால், 2 பந்தில் 8 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான நிலையில் 5வது பந்தை சிக்சருக்கு தூக்கி அசத்திய ஹர்மான்பிரீத், கடைசி பந்தில் 2 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தினார்.இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. கேப்டன் ஹர்மான்பிரீத் 41 ரன் (41 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ராஜேஸ்வரி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தகுதிச் சுற்றில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியாவின் தீப்தி ஷர்மா பைனலுக்கான சிறந்த வீராங்கனை விருதும், தென் ஆப்ரிக்காவின் சுனே லூவஸ் தொடரின் சிறந்த வீராங்கனை விருதும் பெற்றனர்.முதல் 4 இடங்களைப் பிடித்த இந்தியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஏற்கனவே பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை