பாக். நீதிமன்ற வளாகத்தில் குண்டு வீசி தாக்குதல் : 7 பேர் பலி

தினகரன்  தினகரன்

பெஷாவர்: பாகிஸ்தானில் நீதிமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு, தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள டான்கி நகர் பகுதியில் நீதிமன்றம் உள்ளது. நேற்று  பிரதான நுழைவு வாயில் வழியாக நீதிமன்ற வளாகத்திற்குள் தீவிரவாதிகள் சிலர் நுழைந்தனர். உள்ளே நுழைந்த அவர்கள் திடீரென அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, கையெறி குண்டுகளையும் வீசினார்கள்.அங்கு இருந்த பாதுகாப்பு வீரர்கள், தீவிரவாதிகளுக்கு எதிராக பதிலடியில் இறங்கினர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நுழைவு வாயிலில் இருந்த தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்ற தீவிரவாதியையும் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். மேலும் ஒரு தீவிரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்ய முயன்றபோது உயிரிழந்தான். தீவிரவாதிகள் இந்த திடீர் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது. ப்ளஸ்: சிந்து மாகாணத்தில் உள்ள சுபி தர்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இதுதொடர்பாக 130 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மூலக்கதை