ஐபிஎல் மாயாஜாலம் ஆட்டோ டிரைவரின் மகனை ரூ.2.6 கோடிக்கு வாங்கிய சன்ரைசர்ஸ் - நல்ல இடத்தில் வீடு வாங்க வேண்டுமாம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் மாயாஜாலம் ஆட்டோ டிரைவரின் மகனை ரூ.2.6 கோடிக்கு வாங்கிய சன்ரைசர்ஸ்  நல்ல இடத்தில் வீடு வாங்க வேண்டுமாம்

ஐதராபாத்: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 10வது சீசன் டி20 தொடர் வரும் ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நேற்று நடந்தது.


இதில், இர்பான் பதான், புஜாரா, இஷாந்த் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் ஏலம் போகாத நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை ரூ. 2. 6 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது. இவரது அடிப்படை விலை வெறும் ரூ. 20 லட்சமே என்றிருந்த நிலையில், அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே கூறலாம்.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த முகமது சிராஜூக்கு தற்போது 22 வயதாகிறது. இவரது தந்தை முகமது கயூஸ், தாயார் ஷபானா பேகம்.

ரஞ்சி, சையது முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட தொடர்களில் முகமது சிராஜ் விளையாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்த செய்தியை அறிந்த முதல் 20 வினாடிகள் என்னால் எதுவும் பேசவே முடியவில்லை.



பின்னர் இருக்கையில் இருந்து எழுந்து சென்று எனது தாயாரை கட்டி அணைத்து கொண்டேன். இனி எனது தந்தை ஆட்டோ ஓட்டுவதை நிறுத்த வேண்டும் என விரும்புகிறேன்’ என்றார்.

ஆனால் முகமது கயூஸோ வேறொரு நிலைப்பாட்டை கொண்டுள்ளார். ‘எனது உடலில் பலம் இருக்கும் வரை ஆட்டோ ஓட்டுவேன்.

மகனை சார்ந்து ஏன் இருக்க வேண்டும்?’ என கேள்வி எழுப்புகிறார் அவர். முகமது சிராஜின் மாமா அக்பர்கான்தான் அவரை கிரிக்கெட் விளையாடும்படி ஊக்குவித்தவர்.

இது குறித்து முகமது சிராஜ் கூறுகையில், ‘கிரிக்கெட் விளையாடியதன் மூலம் எனக்கு கிடைத்த முதல் வருவாய் தற்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு கிளப் மேட்ச்.

எனது மாமாதான் (அக்பர்கான்) அந்த அணியின் கேப்டன். 25 ஓவர்கள் கொண்ட போட்டியான அதில், நான் 20 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றினேன்.

இதனால் மகிழ்ச்சியடைந்த எனது மாமா பரிசாக எனக்கு ரூ. 500 கொடுத்தார். எனது குடும்பத்தினருக்காக நல்ல இடத்தில் வீடு வாங்க வேண்டும்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் விவிஎஸ் லட்சுமணன் (ஆலோசகர்), டேவிட் வார்னர் ஆகியோருடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்வது மிகப்பெரிய பிளஸ்’ என்றார்.

.

மூலக்கதை